விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை, ஆனால் விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பழனியில் நகைச்சுவையாக பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரிமா சங்கத்தின் மதுரை மண்டல மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்திரராஜன் பங்கேற்றார். அப்போது தமிழிசை சௌந்திரராஜன் பேசியதாவது, இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள் என் தந்தை பற்றி பேசி மகிழ்ந்தனர். சிலர் என்னுடன் பேசும்போது மருத்துவருக்கு படித்திருந்தாலும், தமிழ் நன்றாக பேசுவதற்கு என்ன காரணம் என்று கேட்கின்றனர். தமிழிசை என்று பெயர் பெற்றதால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதால் இப்படி தமிழ் பேசுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சியில் 6 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கால் இடரி கீழே விழுந்தேன். கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் அதை பெரிய செய்தியாக வெளியிட்டதால் என்னிடம் பலரும் நலம் விசாரிக்கிறார்கள். நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால் நான் விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது என தெரிவித்தார். மேலும் தெலுங்கானாவில் நன்கு படிக்கும் ஏழை மாணவன் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தனக்கு லேப்டாப் இல்லாததால் தனது படிப்புக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று தனது நிலையை தெரிவித்தார்.
அதனால் அவருக்கு தான் லேப்டாப் ஒன்று வாங்கி கொடுத்ததாகவும், சிலநாட்கள் கழித்து தன்னை தொடர்பு கொண்ட அந்த ஏழை மாணவர், தான் கொடுத்த லேப்டாப் மூலம் நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாக தெரிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், எனவே வீட்டில் பயன்படக்கூடிய, அதேநேரத்தில் பயன்படுத்தாத லேப்டாப்கள் இருந்தால் அவற்றை தெலுங்கானாவில் கொண்டுவந்து தன்னிடம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
ஆளுநராக இருப்பதால் இதுபோன்ற நன்மைகளை செய்ய வாய்ப்பு கிடைப்பதாகவும், ஆனால் இதுபோன்ற நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும், ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச ஆரம்பித்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார். ஆனாலும் இவற்றை காதில் கேட்காமல், இதுபோன்ற சேவையை செய்ய ஆரம்பித்தால் மனதிற்கு கிடைக்கும் நிம்மதி அதிகமானது என்று தெரிவித்தார். தொண்டு செய்யும் உள்ளம் என்றுமே தோற்றதில்லை என்பதால் அனைவரும் தொண்டு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்