திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திருச்செந்தூரை சேர்ந்த வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான துவாதசி மடம் பகுதி தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதனை மீட்டு மீண்டும் கோவிலிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

 

* நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அறியக்கூடிய இடமாக கோயில்கள் உள்ளது. என பலமுறை இந்த நீதிமன்றம் கூறியுள்ளது

 

* கலை, அறிவியல் மற்றும் சிற்பத்துறைக்கு சாட்சியாகவும் கோயில்கள் உள்ளது.

 

* மதரீதியான சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை பராமரிப்பதன் மூலம் வருவாய் பெற முடியும். அதன் மூலம் அந்த சொத்துக்களை பாதுகாக்க முடியும்.

 

* தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் சொத்துக்களை பராமரிப்பது பாதுகாப்பது போன்ற பொறுப்புகள் உள்ளது. அதன் வருவாயை சரியான செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது.

 

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அது அன்னதானம் வழங்கக்கூடிய இடமாக துவாதசி அன்ன தான அறக்கட்டளை அபிவிருத்தி அறக்கட்டளை இடம் இருந்து தற்போது தனி நபருக்கு விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்ததன் படி மனுதாரர் தெரிவித்துள்ள இடம் பதியப்படும்போது இரு வேறு தகவல்கள் உள்ளது.

 

எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகம் ஆகியோர் இணைந்து மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 















மற்றொரு வழக்கு

 

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த மணிபாபா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.  அதில், "கொரோனா ஊரடங்கால் சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்கள் அதிகமாக பாதித்துள்ளனர். சுமார் 2.50 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் உள்ளனர். ஆனால் சலவை தொழிலாளர்கள் நலவாரியத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். 

 

கொரோனா பாதிப்பால் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும், கைத்தறி மற்றும் கட்டிடத் தொழிலாளர்களுக்கும் அரசு நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. 

 

ஆனால், சலவைத் தொழில் மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரணமும் வழங்க வில்லை. 

எனவே, கொரோனா ஊரடங்கால் வழக்கமான வாழ்வாதாரத்தை இழந்துள்ள சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரிக்க வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையதால், மனுதாரர் கோரிக்கை குறித்து அரசிடம் முறையிட்டு பரிகாரம் தேடலாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.