கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது.

பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. கோவிலில் நேற்று அதிகாலை முதல் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் வழக்கமான பூஜைகள் நடந்தன. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, வயநாடு உள்பட மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. சபரிமலையிலும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பம்பை ஆற்றில் புனித நீராட ஐயப்ப பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பம்பை திருவேணி பகுதியில் வாகனங்கள் நிறுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதே சமயத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.