கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் தென் மேற்கு பருவமழை காலம் என்றாலே அப்பகுதி மக்களுக்கு ஒரு வித சிரமம்தான். கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து, ஒரு வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் ஒரு வாரம் இடைவெளிக்கு பின் மீண்டும் தீவிரமடைந்தது. இதனால், முண்டக்கை பகுதியில் வெள்ளப்பெருக்குடன், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டது. எர்ணாகுளம். இடுக்கி, கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கேரள மாநிலம், திருச்சூர் கொடகரை பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. உள்ளூர்வாசிகள், போலீசார் மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் அதிகாலை இடிந்து விழுந்தது. அந்த கட்டிடம் வெளிமாநில தொழிலாளர்களை தங்கவைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த கட்டிடத்தில் 17 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் சிலர் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்ட நிலையில், கட்டிடம் இடிந்தபோது உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
குடியிருப்பாளர்கள் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கட்டிடத்தில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் 14 பேர் காயமின்றி உயிர் தப்பினர். பலியானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராகுல் (19), ரூபெல் (21) மற்றும் அலீம் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அவ்வழியாகச் சென்ற ஜீப் சிக்கிக் கொண்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஜீப்பில் பயணித்தவர்களை கயிறுக் கட்டி மீட்டனர்.