சிண்டிகேட் உறுப்பினர் பதவி தருவதாக கூறி, தனக்கு அட்ஜெஸ் செய்ய வேண்டும் என தொந்தரவு அளித்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைகழக முன்னாள் பதிவாளர் தனது, போட்டோவை பயன்படுத்தி வாட்ஸ்-அப் குழுக்களில் அவதூறு பரப்பி மிரட்டல் விடுப்பதாக  தென்மண்டல ஐஜியிடம் கல்லூரி பெண் முதல்வர் புகார் மனு.

 

புகைப்படத்துடன் தவறான தகவல்கள்

 

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் கல்வி கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்துவரும் பெண் முதல்வர் ஒருவர் ஆசிரியர் கல்வி பல்கலைகழக முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னை பற்றி வாட்ஸ்அப் குழுக்களில் தனது புகைப்படத்துடன் தவறான தகவல்களை பகிர்ந்துவருவதாகவும், ராமகிருஷ்ணன் மீது தான் அளித்த புகாரை வாபஸ் பெற கூறி பல்வேறு தரப்பினர் மூலமாக தனக்கு மிரட்டல் அளித்துவருவதாக கூறி மதுரையிலுள்ள தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் மனு அளித்தார்.

 

தவறான புகைப்படம்

 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெண் முதல்வர்...,” தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக தாளாளராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற நிலையில் கல்லூரி முதல்வர் என்ற அடிப்படையில் ஏராளமான கல்லூரி முதல்வர்கள் நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். சில நாட்கள் கழித்து பதிவாளர் ராமகிருஷ்ணன் அவருக்கு அருகே எனது போட்டோ இருப்பது போல CROP செய்து தினசரி எனது வாட்ஸ்அப்புக்கு அனுப்பி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என தொந்தரவு அளித்துவந்தார். 

 

சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்ய உள்ளேன்

 

மேலும் கடந்த மார்ச் மாதம் எங்களது கல்லூரியில் CPA ஆய்வுக்கான சுற்றறிக்கையை வழங்கிய பதிவாளர், CPA ஆய்வுக்கான ஆய்வாளரை அனுப்பிவைத்து அவர் மூலமாக  10 இலட்சம்  உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும், தான் 3 கோடி ரூபாய் கொடுத்து தான் வந்துள்ளேன் என்றும், ஆதலால் இந்தப் பணத்தை வழங்கவில்லை என்றால், முதல்வர் பதவியில் இருந்து உங்களை நீக்கும் அளவிற்கு எனக்கு பவர் இருக்கிறது.  என்று மிரட்டினார். அதற்கு நான் மறுத்த நிலையில் பின்னர் நான் பணிபுரியும் கல்லூரி தாளாளர் மூலமாக 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். இதன் பின்னர் மார்ச் 19 ஆம் தேதி வாட்ஸ்ஆப் கால் மூலம் பேசி உங்களை சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்ய உள்ளதாகவும், நீங்கள் அழகா இருக்கிறீர்கள் எனவே அப்போதைய உயர்க்கல்வித்துறை செயலாளரின் பெயரை பயன்படுத்தி தன்னோடு அட்ஜெஸ்  செய்ய வேண்டும் என கூறி தொந்தரவு அளித்தார்.

 

பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை திரும்பபெற வேண்டும்

 

இதனால் மனமுடைந்த நான் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் பதிவாளர் ராமகிருஷ்ணனின் நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்தேன். இதனை எடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் பதிவாளர் பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே நான் அளித்த பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை திரும்பபெற வேண்டும் என கூறி, தொடர்ந்து பல்வேறு முறைகளில் மிரட்டல் விடுகிறார். தான் பணி செய்துவரும் கல்லூரிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி  தவறான அவதூறான தகவல்களை பதிவிட்டு வருகிறார். இதையடுத்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று கண்ணீர்மல்க புகார் அளித்தேன். ஆனாலும் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு எனது புகார் மாற்றப்பட்ட நிலையில் அவர்களும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை,

 

பாதுகாப்பு வழங்க கோரிக்கை

 

மேலும் இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்துள்ளேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காத நிலையில் தற்போது தன்னை பணி செய்ய விடாமல் கல்லூரிகளில் உள்ள நிர்வாகிகளிடம் தொடர்ந்து அழுத்தம் செய்துவருகிறார் எனவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்னைப் போன்று ஏராளமான பெண் பேராசிரியர்கள் ராமகிருஷ்ணனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான் துணிச்சலாக ஐஜியிடம் புகார் அளிக்க வந்துள்ளேன். என் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு தனக்கு பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.