துப்பாக்கி உரிமம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த நெல்லை வருவாய் அலுவலரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நெல்லை மனோகரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


நெல்லையைச் சேர்ந்த மனோகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், "மனுதாரர் கடந்த 2006 ஜூலை மாதம் துப்பாக்கி வைக்க உரிமம் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியில் அச்சுறுத்தும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாகவும், தேசிய நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்ததாரராகவும் பஞ்சாயத்து யூனியன் கட்டுமான பணிகளை மேற்கொள்பவராக இருப்பதால், பணம் விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்லும் பொழுது பாதுகாப்பு கருதியும் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரியுள்ளார். மனுதாரரின் தந்தை 90 வயது நிரம்பியவர். 50 ஆண்டுகளாக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்றிருக்கும் நிலையில், இதுவரை அவர் அதனை தவறாக பயன்படுத்தியதில்லை. இந்நிலையில், நெல்லை மாவட்டம் சமூகப் பிரச்சனைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதாலும், பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மனுதாரருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க இயலாது எனக் கூறி நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் அவரது மனுவை நிராகரித்துள்ளார்.


மனுதாரர் வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், தன்னிடம் உள்ள பொருட்களை பாதுகாக்கும் நோக்கிலுமே துப்பாக்கி வைக்க உரிமம் கோரியுள்ளார். துப்பாக்கி வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இல்லை. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கோர முடியாது. அதற்கான அவசியத்தை முன் வைக்கலாம். ஆகவே மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


 




மற்றொரு வழக்கு


சவுதி அரேபியாவிற்கு கூலி வேலைக்கு சென்ற தன் கணவன் நிலை என்னவென்று தெரியாததால் கணவனை உயிருடனோ அல்லது  உடலாகவோ மீட்டு ஒப்படைக்க கூறி இளம் மனைவி மனு தாக்கல்.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிரிஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு HCB மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது கணவர் சரத்குமார் கடந்த ஜூன் 2022 மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் என்ற ஊருக்கு வேலைக்கு சென்றார். ஆனால் இதுவரை எந்த இது தகவல் தொடர்பும் இல்லை. எனவே எனது கணவரை உயிருடனோ அல்லது உடலாகவோ மீட்டு ஒப்படைக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் PN பிரகாஷ் , ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் வழக்கறிஞர் மனுதாரரின் கணவரின் நிலை குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவித்து அவரின் நிலை என்னவென்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.


இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்  மனு குறித்து இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய தூதரக அதிகாரி ரியாத்தில் உள்ள சிறைகளில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மனுதாரரின் கணவர் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சவுதி அரேபியா அரசால் சட்டப்படி சிறை பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்,  மேலும் நீதிமன்ற உத்தரவை   சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மனுதாரரின் கணவரின் நிலை குறித்து அறிவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்த அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண