தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்றும், போட்டிகள் ஜனவரி 16-ந் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.




ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக காளைகளும், காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்களும் தீவிரமாக தயாராகி வந்தனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் 16-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த நிலையில், 16-ந் தேதியில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை வரும் 17-ந் தேதி ( திங்கள்கிழமை) நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமனதாக முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், வீரர்கள் உள்பட விழாவில் பங்கேற்பவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனா மிகவும் கடுமையாக பரவி வருகிறது. இதனால், மாநில அரசு தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, இன்று மட்டும் தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண