திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வரமா நதி அணையில் மூழ்கி சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜூ என்பவரின் மகன்கள் விக்னேஷ் (29), யோகேஷ் (23). சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கோதண்டராமன் என்பவரின் மகன் ஹரீஷ் (23), காரைக்காலை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் கணேஷ் (21). இவர்கள் கோவை, பழனி , கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அவர்கள் கோவைக்கு சென்று. அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றபின். பின்னர் கோவையில் இருந்து ரயில் மூலம் நேற்று பழனிக்கு வந்தனர். மதியம் 3 மணி அளவில் ஆட்டோ மூலம் பழனி அருகே, கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள வரதமாநதி அணைக்கு அவர்கள் சென்றுள்ளனர். 66 அடி உயரம் கொண்ட அந்த அணை முழுவதுமாக நிரம்பி இருந்தது.



 

தண்ணீர்  நிரம்பிய  அணையின் எழில் கொஞ்சும் காட்சியை அவர்கள்  கண்டு ரசித்த பின்னர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் 4 பேரும் அணையில் இறங்கி தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளனர்.  அப்போது திடீரென்று கணேஷ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விக்னேஷும், யோகேஷும் அவரை காப்பாற்றுவதற்காக அணையின் ஆழமான பகுதிக்கு சென்று தேடினர். சிறிது நேரத்தில் அவர்களும் நீரில் மூழ்கினர். இதனால் செய்வதறியாது தவித்த ஹரீஷ் அணையின் கரை பகுதிக்கு ஓடிவந்து, காப்பாற்றுங்கள் அலறியுள்ளார்.



 

சத்தம் கேட்டு அணை பகுதியில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையம் மற்றும் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், ஆயக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  தீயணைப்பு படைவீரர்கள் அணையில் இறங்கி, ரப்பர் டியூப் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  சில மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 



 

இதனை அடுத்து 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதி கொடைக்கானல்  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் கொடைக்கானல் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘செல்பி’ எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் பழனி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண