பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Continues below advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அதிக அளவில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் அக்டோபர் 17 அக்டோபர் 21 வரை கூடுதல் பயணச்சீட்டு பதிவு சாளரங்கள், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை விரைவாக இயக்க கூடுதல் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்க நுழைவு வாயில்களில் தீவிர பயண சீட்டு பரிசோதனை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்

பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், தமிழக ரயில்வே காவல்துறை பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வார்கள். பயணிகளின் பாதுகாப்பாக பயணத்தை உறுதி செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பையும் ரயில்வே நிர்வாகம் நாடுகிறது. அந்த வகையில் ரயில்களில் பயணத்தின் போது ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகள், வெடிப் பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

இதை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களின் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.