பாலமேடு ஜல்லிக்கட்டு:


உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களின்  உறுதி மொழியுடன் தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது. முதலில் கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.


களைகட்டிய போட்டி:


இதையடுத்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தி அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று விளையாட, வீரர்கள் சிதறி ஓடினர். முரண்டு பிடித்த சில காளைகளை வீரர்கள் பயமின்றி பிடித்து அடக்கியதை கண்டு, அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர். காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு, யார் கையிலும் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இரண்டாம் சுற்று முடிவுகள்:


சிறப்பாக விளையாடும் நபர்கள் தொடர்ந்து அனைத்து சுற்றிலும் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், இரண்டாம் சுற்று முடிவில் 200 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 65 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதிகபட்சமாக, பாலமேட்டை சேர்ந்த ராஜா மற்றும் மணி ஆகியோர் தலா 9 காளைகளை அடக்கியுள்ளனர். இதேபோன்று அரவிந்த் என்பவர் 8 காளைகளையும், அலங்காநல்லூரை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பர் 6 காளைகளையும் அடக்கியு அசத்தியுள்ளனர். இவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த ராஜா, மணி மற்றும் அரவிந்த ஆகியோர் மூன்றாவது சுற்றிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.






கண்டு களிக்கும் பொதுமக்கள்:


பாலமேடு மட்டுமின்றி சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த போட்டியை ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர். துணிவு படத்தின் வில்லனான ஜான் கொக்கேன் குடும்பத்துடன் வந்து போட்டியை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பரிசுமழை:


சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது.