முகநூல் பழக்கம் மூலம் ஏமாந்த ரூ.14.35 லட்சத்தை மீட்க உரிய விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டு தர கோரிய வழக்கில், மனுதாரர் புகாரை மாவட்ட குற்றப்பிரிவு அல்லது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து திருச்சி எஸ்பி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திருச்சி மாவட்டத்தைவ் சேர்ந்த விஜயலட்சுமி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "எனக்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன் என்பவர், ஷேர்மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினர். 

 

இதனால், எனது ஓய்வூதிய பணம் மற்றும் வெளிநாட்டில் வேலைபார்க்கும் என் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரின் பணம் ரூ.14.35 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். இதன்பிறகு அவரது செல்போன் எண்ணும், முகநூல் முடக்கப்பட்டது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.என்னிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளனர். எனது புகாரை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சக்திகுமார் சுகுமாரா குரூப், மனுதாரர் புகாரை மாவட்ட குற்றப்பிரிவு அல்லது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து திருச்சி எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

 
















 

மற்றொரு வழக்கு

 

நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்? ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு - நீதிபதிகள் கேள்வி

 

சிவகங்கை, மானாமதுரை வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களிலுள்ள சீமை கருவேலங்களை அகற்றியும், விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலையை சீரமைக்க கோரிய வழக்கில், வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், சாலையை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை ஐயர்பங்களாவைச் சேர்ந்த கோவிந்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு. அதில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் மழையை நம்பித்தான் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. 

 

இதனால் மழை நேரங்களில் தண்ணீர் இந்த கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது. கண்மாயில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அதன் அடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதியும் வேளாண்குளம் கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

 

மேலும் பெரிய கோட்டையில் இருந்து முத்தனேந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கில் இருந்து சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

 

எனவே, வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களிலுள்ள சீமை கருவேலங்களை அகற்றியும், விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

 

மனுதாரர் தரப்பில், கால்வாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும், சாலையை சீரமைக்கைவும் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் அதிகாரிகள் அதனை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், சாலையை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கேள்வி எழுப்பினர்.பின்னர் இது தொடர்பாக மனுதாரர் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

 

வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், சாலையை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.