கணபதி, பிள்ளையார், ஆனைமுகன், மூஷிக வாகனன், மோதகப் பிரியன், கஜமுகன் என நாடு முழுவதும் பல பெயர்களால் போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வணங்க உகந்த தினம் விநாயகர் சதுர்த்தி. ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட்-31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகர் அவதரித்த திதி அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.



விநாயகர் அவதரித்த திதியே விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தாண்டு கொரோனாவுக்கு பின் கோலாகலமாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலை பிரமாண்டமாக செய்யப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் களிமண்னுடன் யானை சாணத்தை கலந்து விநாயகர் சிலை செய்யப்படுவது பாராட்டை பெற்றுள்ளது.



 

இதுகுறித்து மூத்த மண்பாண்ட கலைஞர் பிச்சை பேசுகையில், “விளாச்சேரி பக்கம் மண்ணு நல்ல மண் என்பதால் தான், எங்க முன்னோர்கள் இங்கே தங்கி தொழில் செய்துள்ளனர். அவர்கள் வழியில் தான் தற்போதும் பாரம்பரிய முறைப்படி  மண்பாண்ட பொருட்கள் செய்கிறோம். சீசனுக்கு தகுந்தவாறு தான் பொருட்கள் செய்வோம். ஆடி மாசத்திற்கு முன்பில் இருந்தே விநாயகர் சிலை செய்ய ஆரம்பித்தி விடுவோம். அப்போது தான் விநாயகர் சதுர்த்திக்கு சரியாக கொடுக்கமுடியும். கொரோனாவிற்கு பின் இந்தாண்டும் கூட  சிலை விற்பனையில் வேகம் இல்லை. அதனால் பாதிக்கு பாதி தான் சிலை செய்கிறோம். அடுத்த ஆண்டு பழையபடி விற்பனை இருக்கும் என நம்புகிறோம். 



அடிக்கு 3 ஆயிரம் வரை வாங்குகிறோம். 3 அடி முதல் 7 அடி வரை சிலைகள் செய்கிறோம். முன்னோர்கள் மண்ணை சுவைத்து பார்த்து தான் தகுதியான மண்ணை தேர்வு செய்வார்கள். களியாவும் இல்லாமல் மண்ணாகவும் இல்லாமல் நடுத்தரமான மண்ணை எடுத்து சிலை செய்கிறோம். தேர்வு செய்யப்பட்ட மண்ணை மழை நீருடன் பிசைந்து யானை சாணத்தை கலந்து சிலையாக வடிக்கிறோம். நேரம் எடுத்து செய்வதால் நுணுக்கங்களுடன் செய்ய வேண்டும். அதனால் ஒவ்வொரு சிலை செய்வதற்குள் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதைப் போல் சிரமங்கள் இருக்கும்" என்று உணர்ச்சி பொங்க பேசினார்.



 

மேலும், மண்பாண்ட கலைஞர் விஜயகுமார்..," மழை நீர், களிமண், யானை சாணம் மட்டும் கலந்து செய்வதால் மண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாறாக நீர் நிலையில் மீனுக்கு உணவாக தான் மாறும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சிலை செய்கிறோம். ஆனால் போடப்படும் சட்டங்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு மாதிரி அதிகாரிகள் செயல்படுகின்றனர்.



 

பாஸ்டாப் பாரிஸ் உள்ளிட்ட கெமிக்கல் சிலைகளை ஸ்டாக் வைக்கலாம் ஆனால் மண் சிலைகளில் ஸ்டாக் இருக்காது. லேசா தண்ணி பட்டாலும் அவ்வளவு தான் கரைந்துவிடும். கெமிக்கல் சிலைகள் எல்லாம் பழைய ஸ்டாக் தான் விற்பனையாகும். இந்தாண்டு புதியாக சிலை செய்வது வாய்ப்பு குறைவு தான். அரசு கொண்டுவரும் விதிகளை முறையாக நடைமுறை படுத்தவேண்டும். இல்லை என்றால் தளர்வு அளிக்க வேண்டும் அப்போது தான் குழப்பங்கள் இருக்காது" என்றார்.