TN Lok Sabha Election Results 2024 ; மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து நொடிக்கு நொடி அரசியல் நகர்வுகள் மாறி வருகின்றன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக வெளியான தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை கொடுத்துள்ளது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40/40 சீட்டுகளை தி.மு.க., கூட்டணி தட்டித் தூக்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி திராவிட கட்சியான அ.தி.மு.க., பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் என 2 பேர் இருந்தும் அதிமுக 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மதுரையில் வென்ற சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை என வாக்குகள் தனி தனியாக எண்ணப்பட்டது. 25 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தி.மு.க கூட்டணியின் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முதல் 9 சுற்றுக்களில் அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் 2-ம் இடம் பிடித்தார். 10-வது சுற்றில் இருந்து அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் பின்னுக்கு தள்ளப்பட்டு பா.ஜ.க வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசன் 2-ம் இடத்தை பிடித்தார். இறுதிச்சுற்றின் நிலவரப்படி 9,88,216 வாக்குகள் எண்ணப்பட்டன, அதன்படி தி.மு.க கூட்டணியின் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டெபாசிட் இழந்த 18 வேட்பாளர்கள்
2,20,914 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பா.ஜ.க வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசனும், 2,04,804 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணனும், 92,879 வாக்குகள் பெற்று, 4-ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி பிடித்தனர். மேலும் நோட்டா 11,174 வாக்குகள் பெற்றுள்ளது. பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தேவி உட்பட 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மதுரை மக்களவைத் தொகுதியில் 2-ம் முறையாக வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார். இதனால் தொடர்ச்சியாக 2-வது முறையாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., உருவெடுத்துள்ளார். மதுரையில் சு.வெங்கடேசன் வெற்றிபெறுவார். ஆனால், பெரியளவு வாக்கு வித்தியாசம் இருக்காது. மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவார். டாக்டர் சரவணன் வெற்றிக்கு மிகநெருக்கமாக வருவார் என கூறப்பட்ட நிலையில், டாக்டர் சரவணன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது, அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் உள்ளடி வேலை
இது குறித்து டாக்டர்.சரவணன் ஆதரவாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில்..,” பல்வேறு கட்சிகளுக்கு சரவணன் தாவினார் என்று மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்தாலும்ம், டாக்டர் சரவணன் மனிதநேயம் கொண்டவர். மதுரையில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக பல்வேறு விசயங்களை முன்னெடுப்பார், என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. ஆனால், மதுரையின் அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளார்கள் டாக்டர் சரவணன் வென்றுவிட்டால் மாவட்ட செயலாளர் பதவியில் போட்டி ஏற்பட்டுவிடும். என, வேண்டும் என்றே அ.தி.மு.க., தொண்டர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மதுரை கிழக்கு, மேலூர் தொகுதியின் பொறுப்பாளராக ராஜன் செல்லப்பாவும், மற்ற 4 நகர் தொகுதிகளையும் செல்லூர் ராஜூவும் கவனித்துக் கொண்டார். இந்த சூழலில் முழுக்க முழுக்க செல்லூர் ராஜூவின் நெருங்கிய ஆதரவாளர்களும், ராஜன் செல்லப்பாவின் நிழல்களும் இந்த உள்ளடி வேலை செய்துவிட்டனர் என பெயர் வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கையோடு குமுறினர்.
மதுரையில் டாக்டர் சரவணன் பணத்தை கணக்கு பார்க்காமல் செலவு செய்துள்ளார். ஆனால் கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல், வாங்கிய காசுக்கும் விசுவாசம் இல்லாமல் வேண்டும் என்றே உள்ளடி அரசியல் செய்து அவரை தோற்கடித்துவிட்டனர். மதுரை மத்திய சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வீடுகளுக்கு சரவணனின் நோட்டீஸ் கூட செல்லவில்லை என்ற புகார்கள் கிடைத்தது. மேலூர் மற்றும் கிழக்கு தொகுதியில் பணிகளை முடக்கியுள்ளனர். யாரும் பணி செய்ய வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு போனில் தகவல் சொல்லியுள்ளனர். அதனால் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் கடமைக்கு வேலை செய்துள்ளனர். டாக்டர் சரவணனின் வசிக்கும் வடக்கு தொகுதியிலும் மற்றும் சொந்த சாதி ஓட்டுகள் மட்டுமே அவருக்கு பெரும்பான்மையாக விழுந்துள்ளது. மற்றபடி, ஒட்டுமொத்தமாகவே மதுரை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் நடைபெற்ற உள்ளடி வேலைகளால் மட்டுமே டாக்டர் சரவணனின் வெற்றியை கேள்விக் குறியாக்கியுள்ளது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இரண்டு மாவட்ட செயலாளர்களின் பின்னணியில் செயல்பட்ட நபர்களிடம் தலைமை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரை மளமளவென வாசித்தனர். இது தொடர்பாக கட்சி தலைமைக்கும் அவர்கள் புகார் அனுப்பியிருப்பதாக கூறியுள்ளனர்.
தோல்வி செயற்கையானது அல்ல
அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் ”இது இயல்பான தோல்விதான். தமிழகம் முழுவதும் நாங்கள் தோல்வியை சந்தித்திருக்கோம். தோல்வியில் இருந்து மீண்டு சட்ட மன்றத்தில் வெற்றியை சுவைப்போம். மதுரையில் செயற்கையாக டாக்டர் சரவணன் தோற்கடிக்கப்படவில்லை. முடிந்தவரை செல்லூர் ராஜூவும், ராஜன் செல்லப்பாவும் தேர்தல் பணி செய்தார்கள். அது டாக்டர் சரவணனுக்கே தெரியும்.” என்ற உறுதிபட தெரிவித்தனர்.
இதற்கு இடையே மதுரையின் நகர் அ.தி.மு.க., மற்றும் புறநகர் அ.தி.மு.க., நிர்வாகிகள் மீதான தேர்தல் தோல்வி புகாரை தலைமைக்கு கடத்தியிருப்பதாக தகவல்கள் கசிந்துவருகிறது.