தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் ஐயப்பன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர் ரங்கசாமி (65),இவர் ஒரு விவசாய கூலித் தொழிலாளி இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணம் முடிந்து  அண்டை மாநிலமான கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

  




கூலித் தொழிலாளி ஆன ரங்கசாமி தேவாரத்தில் இருந்து சாக்குழுத்துமெட்டு  வழியாக வாரத்தில் மூன்று தினங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்தே சென்று கேரளாவில் கூலி வேலை செய்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 


இந்நிலையில் இன்று காலை ரெங்கசாமி தேவாரம் இருந்து கேரளா வேலைக்காக சாக்குழுத்துமெட்டு மலைப்பாதை வழியாக நடந்து சென்றுள்ளார். ஆனால் கேரளாவில் உள்ள அவர் வேலை செய்யும் இடத்திற்கு வெகு நேரமாகி வரவில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேவாரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சாக்குழுத்துமெட்டு பகுதியில் சென்று பார்த்தபோது ரங்கசாமி யானை மிதித்து உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.




 இதனை அடுத்து அவரது உடலை மீட்டு வனத்துறையினர் உடனடியாக தேவாரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வனத்துறையினரும் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




தேவாரம் பகுதியில் பல்வேறு வருடங்களாக இந்த சாக்குழுத்துமெட்டு சாலையில் ஆண்டு தோறும் யானையால் தாக்கப்பட்டும் மிதிக்கப்பட்டும் மனித உயிர்கள் பறிபோவது வழக்கமாக உள்ளது. நீண்ட காலமாக தேவாரம் சாக்குழுத்து மெட்டு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. இந்த காட்டு யானையை இப்பகுதியில் இருந்து விரட்டுவதற்கு தொடர்ந்து தேவாரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த காட்டு யானையை இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முடியாமல் பெரும் சவாலாகவே உள்ளது. 


மீண்டும் ஓர் உயிரிழப்பு இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதால் தேவாரம் மலையடிவாரப் பகுதி பண்ணைப்புரம் மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்ட பகுதியில் வேலைக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.