தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை, தென்னை, வாழை என அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும் வேளாண் பகுதியாக விளங்குகிறது. கம்பமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூடலூர், சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மட்டும் இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால், அதிக அளவில் கேரளாவுக்கு திராட்சை அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வரும் நிலையில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகளுக்கு பிறகு திராட்சை ஏற்றுமதி நன்கு இருந்து வந்தது. விளைச்சலும் அதிக விலையும் போன திராட்சை கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இதன் காரணமாக கருப்பு பன்னீர் திராட்சை கேரளாவுக்கு ஏற்றுமதி ஆகவில்லை.
இதனால் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி அடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற கருப்பு பன்னீர் திராட்சை இன்று கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தொடர் மழை காரணமாக கேரளாவில் மார்க்கெட்டில் திராட்சை விற்பனை இல்லை. இதனால் திராட்சை தோட்டங்களில் கொள் முதல் செய்யும், வியாபாரிகள் உள்ளூர் சந்தைகளுக்கு அனுப்புகின்றனர். மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்கின்றனர். இந்நிலையில் தற்போது பருவமழையின் எதிரொலியால் திராட்சை விவசாயம் கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்