சாட்டை துரைமுருகன்  யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

 

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி  தமிழக முதல்வர் குறித்து அவதூறுக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் பேசிய விபரங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

 



 

இந்நிலையில் வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தபோது,  துரைமுருகன் பேசிய விபரங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு நீதிபதி, "ஒரு முதல்வரை தவறாக விமர்சித்துள்ளார். அந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இயலவில்லையா? அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு முதல்வருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? அவர்களின் வழக்குகள் எவ்வாறு கையாளப்படும்? காவல்துறை அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டாமா? என கேள்வி எழுப்பி போதிய ஆதாரம் இல்லாததால் அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். பின்னர் அரசுத்தரப்பில்  1 வாரம் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.  அதற்கு உங்களை நம்பியே இந்த நாடு உள்ளது என தெரிவித்து வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.




2019 குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு 



மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"2019 ஆம் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும்  5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த குரூப் 4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால் தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர முடியும். எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர்.சிபிசிஐடி காவல்துறையினர் தங்கள் வசமுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும், வழக்கை சிபிஐ காவல்துறையினர் நேர்மையாகவும் விரைவாகவும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.