அதிமுகவின் மடிக்கணினி திட்டத்தையும் வழங்கவில்லை, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த டேப்லெட் திட்டத்தையும் மாணவர்களுக்கு வழங்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், “திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களுக்கு தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கை அறிவிப்புகள் கானல்நீராக உள்ளது. இது வேதனை அளிக்கிறது. திமுகவின் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நான்காம் தலைமுறை ஐந்தாம் தலைமுறை 4G,  5G மாதம் 10GB பதிவிறக்கம் செய்ய வசதியுடன் கூடிய, இணையதள இணைப்புடன் கைக்கணினி (Tablet) அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்து கல்வி நிலையங்களிலும் Wi-Fi வசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 505 தேர்தல் வாக்குறுதியில் இதுவும் கானல் நீராக உள்ளது. 



 

இளைய சமுதாயத்தினுடைய எதிர்கால கணினி அறிவை, இந்த கணினி யுகத்தை முன்கூட்டியே எதிர்கொள்வதற்காக  இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே வல்லரசு நாடுகள் கூட இல்லாத வகையில் ஜெயலலிதா பள்ளி, கல்லூரி ,பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு மடிக்கணினி வழங்குகிற ஒரு மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து கணினியில் புரட்சி செய்தார். கடந்த பத்து ஆண்டுகளில் 53 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. குறிப்பாக கொரோனா காலத்திலே கூட அந்த மடிக்கணினி உற்பத்தி பல்வேறு சவால்களுக்கு நடுவில் அதை பெற்று தந்து சாதனை வரலாறு படைத்தவர் எடப்பாடியார்.



 

இன்றைக்கு இரண்டு ஆண்டு காலம் வழங்கவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கேள்வி எழுப்பினார். அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றாலும்,  நிதி ஒதுக்கீடு குறித்த  விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்கிற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு எல்லாம் கணினி யுகமாக இருக்கிறது. ஆன்லைனில் தான் இன்றைக்கு அனைத்தும்  நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த கணினி யுகத்தில் இளைய சமுதாயத்தை அரசு பள்ளியில் படிக்கிற ஏழை எளிய மாணவர்கள் , மரத்தடியில் இருந்த மாணவர்களுக்கு மடிக்கணினி தந்து ஒரு வரலாற்று புரட்சி செய்தவர் ஜெயலலிதா இன்றைக்கு மாணவர்களுக்கு அதிமுக வழங்கிய மடிக்கணினியை வழங்கவில்லை ,திமுக சொன்ன டேப்லெட் (Tablet) திட்டத்தையும் வழங்கவில்லை.

 




 

எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தாய்த்தமிழ் நாட்டில் 7 சட்டக் கல்லூரிகள், 21 பல்கலை தொழில்நுட்பக் கல்லூரிகள், 5 கால்நடை கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 அரசு மருத்துவகல்லூரிகளை ஒரே ஆண்டில் பெற்றுத் தந்து ஒரு எளிய முதல்வராக சாமானிய முதல்வராக  எடப்பாடியார் இன்றைக்கு அந்த சரித்திர சாதனை படைத்திருக்கிறார். இந்த சாதனையை யாரும் எளிதாக கடந்து விட முடியாது. அதே போல் எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுக்கொடுத்தார்.



பள்ளிக்கல்வியை ஊக்குவிக்க 14 வகை கல்வி உபகரணத்துடன்  இந்த மகத்தான மடிக்கணினி திட்டத்தை அரசு எப்போது நிறைவேற்றும், எப்போது தொடங்கி வைக்கவும், எப்போது மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் என இந்த மாணவர்கள் , கவலையோடு கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிற மாணவ செல்வங்களுக்கு  மடிக்கணினி வழங்கி கல்வி அறிவை அறிவை வளர்ப்பதற்கு இந்த அரசு முன்வருமா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.