தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெல்லும் என்றும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மந்திரிசபையே அமையும் எனவும் பிரேமலதா தெரிவித்தார்.
தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பழனிக்கு வருகை தந்தார் . உள்ளம் தேடி இல்லம் நாடி பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக பழனிக்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பழனி பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி பிரேமலதா பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
கேப்டன் விஜயகாந்த் தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்துகிறார். வருகிற 2026தேர்தல் தேமுதிகவிற்கு மிகமிக முக்கியமான தேர்தல் என்றும், தேமுதிகவை இப்படியே வைத்து பலன் அனுபவித்து கொண்டு இருக்க முடியாது. இந்த முறை தேமுதிக இருக்கும் கூட்டணியே வெற்றி பெரும். வருகிற ஆட்சி கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும், தேமுதிக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆர்வகோளாறு காரணமாக ஒரு கூட்டத்தில் பிரதமர் பிரேமலதா என்று என்னை கூறிவிட்டார். தேமுதிக தொண்டர்களுக்கு நான் முதல்வர், துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். எனக்கோ தேமுதிகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் நகராட்சி, ஊராட்சி கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதாகவும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சாதனை படைக்கும் என்றார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக விற்கு அடுத்து தேமுதிக பெரிய கட்சி. தமிழகத்தில் உள்ள 63000பூத்களில் நிர்வாகிகள் அமைத்துள்ளது. இன்றைக்கு தலைவர் இல்லை என்றாலும் கட்சி முதலிடத்தில் இருப்பதற்கு கடைக்கோடியில் இருக்கும் ஆணிவேரான தொண்டர்களே காரணம் என்றார். மேலும் இதுவரை 20ஆண்டுகாலம் தலைவர் முதல் தொண்டன் வரை கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் தேமுதிகவினர் எனவும், சபரிமலை ஐயப்பனை அன்னதான பிரபு என்றும், அணையாத விளக்கேற்றி அன்னதானம் செய்த வள்ளலார் ஆகியோரை போல வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கியவர் கேப்டன் விஜயகாந்த். ஆனால் இன்று உள்ள ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் கொள்ளை அடித்து கொண்டுள்ளனர். அவர்கள் யாரும் ஒருவருக்கு அன்னதானம் செய்ததில்லை. எம்ஜிஆருக்கு பிறகு மக்களை தங்கத் தட்டில் வைத்து நேசித்தவர் விஜயகாந்த் என்றும் தெரிவித்தார். இன்று கல்வி மருத்துவம் எதுவும் இலவசமில்லை.
ஆனால் தேர்தல் நேரம் வந்தால் வாக்குக்கு காசு கொடுப்பது மட்டும் இலவசம். அதையும் 500ரூபாய் கொடுத்துவிட்டு கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் சொந்த உழைப்பில் வேர்வை சிந்தி தொண்டர்கள் சொந்தக்காசை கொடுத்து வைக்கப்பட்ட பேனர்கள் மூலம் தேமுதிகவிற்கு உண்மையான தொண்டர்கள் கிடைத்துள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளனர். மேலும் SIR என்பது நம்முடைய வாக்குகளை ஆட்சியாளர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தடுப்பது. வாக்காளர்கள் ஒவ்வொருவரும் SIR மூலம் தங்களது வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். வெகுவிரைவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். பழனி கொடைக்கானல் பகுதியில் சுற்றுச்சூழலை காக்கவும், பழனியில் கொய்யா பழச்சாறு ஆலை, நெல் கொள்முதல் நிலையம், பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக நிறைவேற்றாத திட்டங்களை தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று அனைத்து பணிகளையும் செய்யும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி 9ம்தேதி கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைய உள்ளது. தமிழகத்தின் டாப் டென் மாநாடு என கூகுளில் தேடிப் பார்த்தால் மதுரையில் கேப்டன் நடத்திய தேமுதிக மாநாடு எனவும், அதேபோல முதல் 5இடங்களும் தேமுதிக மாநாடுதான் என்றும், இந்த மாநாட்டின் வெற்றிதான் 2026தேர்தல் வெற்றியாக அமையும் எனவும் தெரிவித்தார்.