விருதுநகர் மாவட்டம்  தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் விற்பனை நிலையங்களுக்கு தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை.

Continues below advertisement


தீபாவளி 2025


நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை வெடி விபத்தில்லா தீபாவளியாகக் கொண்டாடும் நோக்கிலும், வெடிபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு  வரும் தொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் விருதுநகர் மாவட்ட நிருவாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இடையூறு ஏற்படுத்தும் விதமாக கடைகளின் முன்புறம் தற்காலிக கட்டுமானங்கள் கூடாது


அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலைய உரிமதாரர்கள் அனைவரும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு, மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், கடைகளின் முன்புறம் பாதுகாப்பு தூரத்திற்குள் ஆபத்தான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வெடிபொருள்களை வெடித்துக் காட்டக்கூடாது எனவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கடைகளின் முன்புறம் தற்காலிக கட்டுமானங்களை அமைக்கக்கூடாது எனவும்,மாவட்ட நிருவாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை


மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு வெடிபொருள்கள் இருப்பு வைத்திருத்தல், உரிய தீயணைப்பு சாதனங்கள் இல்லாதிருத்தல், தடை செய்யப்பட்ட வெடிபொருள்களை விற்பனை செய்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் விதிமீறல்கள் ஆய்வின்போது கண்டறியப்படின், தொடர்புடைய வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் நிரந்தரமாக இரத்து செய்யப்படுவதுடன், உரிமதாரர் மீதும் அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.