விருதுநகர் மாவட்டத்தில் முறைகேடாக 33 கனிம வள குவாரிகளுக்கு  அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட கோரிய வழக்கில், பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி மனுதாரர் சிவாவிற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அபராத தொகை 25 ஆயிரத்தை காந்தி அருங்காட்சியகத்துக்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

கரூரைச் சேர்ந்த சிவா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார் அதில்,"மாவட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு குறைவான அளவில்  கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் துறை  ஒப்புதல் வழங்கி அதிகாரம் அளிக்கப்பட்டது.
  

 

கடந்த 2018ல்  நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் உள்ள அலுவலர்கள் மதிப்பீடு செய்வதற்கான போதிய நிபுணத்துவம் இல்லாதவர்களாக இருப்பதாகக்கூறி அதன் செயல்பாட்டை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதனை மறைத்து விருதுநகர் மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் 33 குவாரிகளுக்கு முன் தேதியிட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன இது சட்ட விரோதமானது முறைகேடானது.

 

இதில் மாவட்ட ஆட்சியர் கனிமவளத்துறை அதிகாரிகள் குவாரி உரிமையாளர்கள் இணைந்து இந்த மோசடி நடத்தியுள்ளனர். இதில் பெருமளவு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. ஆகவே விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி சட்டவிரோதமாக 33 சகுவாரிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர், கனிமவளத் துறை இணை இயக்குனர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது அரசு தரப்பில்  மூத்த வழக்கறிஞர் திலக் ஆஜராகி மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போல் மோசடி ஏதும் நடைபெறவில்லை அடிப்படை ஆதாரம் இல்லாமல் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்து உள்ளார் என தெரிவித்தார்.

 

இதனை பதிவு செய்த நீதிபதிகள் பொதுநல வழக்கு என்ற பெயரில் மனுதாரர் அடிப்படை ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்வது மட்டுமல்லாமல் மனுதாரர் சிவாவிற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது இந்த அபராத தொகையை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் செலுத்த உத்தரவிட்டார்.

 



மற்றொரு வழக்கு







சிவகங்கை, கல்குறிச்சி பஞ்சாயத்து நிலங்களுக்கான பட்டாக்களை ரத்து செய்து, அந்த நிலங்களை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கங்கை மாவட்டம், மானாமதுரை அருகே, கல்குறிச்சி கிராம கிராமத்தை சேர்ந்த நடராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் கிராமத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் எங்கள் கிராமத்தினர் தங்களின் கால்நடைகளை மேய்த்து பிழைத்து வந்தனர். பின்னர்  எங்கள் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் சிலர் வந்து தங்கினர். அவர்கள் தொழுநோய் மருத்துவமனையையும் நடத்தி வந்தனர். அவர்கள் எங்கள் கிராமத்தில் உள்ள  நிலங்களை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். மேலும், பல ஏக்கர் நிலங்களை தற்போது பட்டா போட்டு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தத்தில் பஞ்சாயத்து நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் கிராம மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே பஞ்சாயத்து நிலங்களுக்கான பட்டாக்களை ரத்து செய்து, அந்த நிலங்களை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், " மனுதாரர்கள் கூறுவது போல நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிலங்கள் கிரையம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர்களுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மதுரை காந்தி மியூசியத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.