மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு விக்கிரமங்கலம் அடுத்த பானா மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்களான  சன்னாசி - மயிலுத்தாய் தம்பதியருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். தினமும் விவசாய பணிகளுக்கு சென்று அந்த கூலிப்பணத்தை பயன்படுத்தி தனது நான்கு பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகின்றனர். இவர்களது மூத்த மகளான தங்கபேச்சி கிராமத்தின் அருகேயுள்ள விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த , 2020ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.








இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றிபெற்று உள் இட ஒதுக்கீடு கலந்தாய்வில் தனியார் மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்த நிலையிலும் கல்வி கட்டணத்தை தவிர்த்து உணவு, தங்குவிடுதி, பிரிந்து கட்டணத்திற்கான பணம் இல்லாத நிலையில் கல்வியை தொடர முடியவில்லை, அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நீட்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனைத்து செலவீனங்களையும் ஏற்பதாக தாமதமாக அறிவித்ததால் அந்த உதவியும் கிடைக்கவில்லை. 



 

இதனை அடுத்து அரசு மருத்துவகல்லூரியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நாள்தோறும் விவசாய பணியை பார்த்தபடியே மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்விற்காக படித்து தேர்வு எழுதிய நிலையில் 256 மதிப்பெண் பெற்று அரசு உள் ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.  இந்நிலையில்  அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாக கூறினாலும் இந்த ஆண்டும்  உணவு, தங்கும்விடுதி, பேருந்து கட்டணம் உட்பட இதர செலவினங்களுக்கு பணம் இல்லாத சூழலில் மருத்துவகனவை மறந்துவிட்டு வயலில் இறங்கி விவசாய பணிகளை செய்துவருகிறார். தன்னோடு தேர்ச்சி பெற்ற மாணவிகள் அடுத்தகட்டமாக கல்லூரி செல்வதற்கு மகிழ்ச்சியோடு தயாராகிவரும் நிலையில் வறுமையின் காரணமாக வயலிலயே கண்ணீர் ததும்ப முடங்கி கிடங்கும் மாணவி தங்கபேச்சியின் நிலையை எண்ணி பெற்றோரும், சகோதரிகளும் யாரேனும் உதவி செய்யமாட்டர்களா என்ற எதிர்பார்ப்போடு ஏங்கி காத்திருக்கின்றனர்.




 

நீட்தேர்வில் இருமுறை வெற்றிபெற்றும் வறுமையின் பிடியால் மாணவி தங்கபேச்சியின் கைகளில் ஸ்டெதெஸ்கோப்பிற்கு பதிலாக வெண்டைக்காய் பறிப்பதற்காக கைகளில் துணிகளை சுற்றியதோடு இருக்கும் காட்சி மன வேதனையை ஏற்படுத்தியது. விவசாய கூலித்தொழிலாளர்களான  சன்னாசி - மயிலுத்தாய் தம்பதியின் மூத்த மகளான தங்கபேச்சி இருமுறை நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது மகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தேனி சட்டகல்லூரியில் படித்து வருகிறார். 3வது மகள் யூபிஎஸ்சி தேர்விற்கு தயாராகி வருகிறார்.  சன்னாசியின் குடும்பத்தில் 4 பெண் பிள்ளைகளில் கல்வியில் சிறப்பாக படித்து பல்கலைகழகமாக குடும்பத்தை மாற்றிவரும் நிலையிலும் வறுமை என்ற தடையால் நான்கு பெண் பிள்ளைகளும் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. தற்போது தங்கபேச்சி குடும்பத்தினருக்கு சிறிய, சிறிய உதவிகள் கிடைத்து வருகிறது. எனினும் போதுமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



 

இந்நிலையில் அரசுப் பள்ளியில் பயின்று, அரசு உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்துள்ள தங்கப்பேச்சியை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ்சேகர், மாணவியின்  இல்லத்தில் நேரில் சந்தித்து ஸ்டெத்தஸ்கோப் கருவி வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து தங்கபேச்சி கூறுகையில், என்னுடைய குடும்பம் வறுமையான சூழ்நிலையில் இருந்தாளும், கஷ்டப்பட்டு படித்தேன். தற்போது இரண்டாவது முறை நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து உள்ளேன். எங்களுடைய வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்தது மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உற்சாகத்துடன் படிப்பேன். மருத்துவரான  பின் தங்கிய கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம்” என்றார்.