மதுரைக்கு வருகை தரும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வருகையொட்டி சில ஏற்பாடுகளை செய்து தர மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்...


மாநகராட்சி உதவி ஆணையாளர் (பணியமைப்பு) சண்முகம் உத்தரவில், 
’மதுரை மாநகராட்சி மண்டலம் - 4 சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் RSS தலைவரான திரு.மோகன்பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்து கொள்ள உள்ளார்.
எனவே அன்னாரின் வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அன்னார் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளில்


 


1. சாலைகளை சீரமைத்தல்,
2. தெரு விளக்குகளை பராமரித்தல், 
3. சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும்
4. அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபொறாமல் இருப்பதை கண்காணித்தல். போன்ற பணிகளை கவனித்து 'வா அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என்று, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


இதைத் தொடர்ந்து ஏபிபி நாடு சார்பில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்ட போது....


மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனிடம் ABP நாடு சார்பில் கேட்டோம். அவர்,’அரசால் Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நபர்களுக்கு வழக்கமான பாதுகாப்பு எப்போதும் மாநகராட்சியால் தரப்படுவதுதான். அதன் அடிப்படையிலேயே தற்போது மோகன் பகவத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.மற்றபடி அவருக்காக என்று சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை’ என மறுத்துள்ளார். 



மேலும் அவர், ‘உதவி ஆணையாளர் அனுப்பிய சுற்றறிக்கை (Circular) யாரிடமும் அனுமதி கேட்காமல் அனுப்பிவிட்டார். அந்த சுற்றறிக்கைத் தேவையற்றதுதான்’ எனக் கூறினார்.  

 

இதற்கிடையில் மாநகராட்சி சார்பில் சம்மந்தப்பட்ட உதவி ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில்....

மதுரை மாநகராட்சி உதவி ஆணையர்(பணியமைப்பு) 20.7.2021 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விளக்கம்: ‛இஜட் பிளஸ்’ பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும் போது அது தொடர்பான விதிகளின் படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின் படியான பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக, தவறுதலாக புரிந்து கொள்ளப்படும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது சம்மந்தப்பட்ட அலுவலர் சண்முகத்தை மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் பணியிலிருந்து விடிவித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.