திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மருத்துவர் சக்திவேல். இவரது மனைவி செல்வராணி. இருவரும் வீட்டின் அருகே தனியார் மருத்துவமனை ஒன்று நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது சக்திவேலின் தந்தை சென்னியப்பன் வீட்டுக்கு வெளியே வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது  நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 4 பேர் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தவுடன் வரண்டாவில் தூங்கிய சென்னியப்பன் கட்டிப்போட்டு விட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் வீட்டில் தூங்கிய மருத்துவ தம்பதி உட்பட மூன்று பேரையும் கொள்ளையர்கள் கட்டிப்போட்டு பின்னர் வீட்டில் இருந்த சுமார் 150 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு வீட்டின் முன்பு நின்று இருந்த காரில் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். அந்த காரை கொடைரோடு அருகே நிறுத்திவிட்டு நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.




இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் குடும்பத்தினரை மிரட்டியபோது கொள்ளையர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியது தெரியவந்தது. இதனால் அவர்கள் வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வந்தனர். அதனோடு கொள்ளையர்கள் காரை நிறுத்திவிட்டு சென்ற இடத்திற்கே மோப்ப நாயை அழைத்து செல்லப்பட்டது. மோப்பநாய் அங்கிருந்து ஓடி ரயில் தண்டவாளம் அருகே நின்று விட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். கொள்ளையர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று கொடைரோடு அல்லது திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இருந்து ரயிலில் ஏறி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை பிடிக்க 12 தனிப்படைகளை அமைத்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டார்.




கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்ய தனிப்படையினர் விரைந்தனர். அப்போது ஒட்டன்சத்திரம்  நடந்த கொள்ளை சம்பம் போல் தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆறு சம்பவங்களிலும் கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.



அந்தவகையில் 7 சம்பவங்களிலும் கொள்ளையர்கள் சாதுர்யமாக செயல்பட்டு வந்ததும் இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கில்  தொடர்புடைய நபர்களின் விவரங்களை தனிப்படை போலீசார் விசாரணை செய்து ஆய்வு செய்தனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அடுத்த நீராவி மேடு பகுதியைச் சேர்ந்த நீராவி முருகன் கூட்டாளிகள் ஒட்டன்சத்திரம் பாணியில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.



இதன் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் கொள்ளையில் நீராவி முருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்து நீராவி முருகன் மற்றும் அவருடைய கூட்டளிகளை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக பழனி சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான தனிப்படையினர் கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை செய்து வந்தனர். அப்போது களக்காடு சுப்பிரமணியருக்கு அருகே மலைப் பகுதியில் நீராவி முருகன் மறைந்து இருப்பது தெரியவந்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது நீராவி முருகன் போலீசாரை தாக்கியதாகவும் இதனால் தனிப்படை போலீசார் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண