திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர் செல்வம் (57) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் நகர் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர்.
திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் 2012-ம் ஆண்டு பதிவு செய்யப் பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்த மதுரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம். இவர், மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் செல்வத்தை தேடி வந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தனது கூட்டாளிகளுடன் வரிச்சியூர் செல்வம் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் துணையுடன் சிலைமான் போலீஸார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது வரிச்சியூர் செல்வம் அவரது கூட்டாளிகளான கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ஆகியோருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் ரவுடி வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பலமுறை ரவுடி வரிச்சியூர் செல்வம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் வத்தலக்குண்டு பகுதிக்கு வந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், திண்டுக்கல் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் குமார் முன்னிலையில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.