திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தயார் செய்யப்படும் ஆயத்த ஆடைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஆண்டு முழுவதும் இத்தொழில் நடைபெற்று வந்தாலும், தீபாவளி, ஓணம் பண்டிகைகளை மட்டுமே உற்பத்தியாளர்கள் பிரதானமாக எதிர்பார்க்கின்றனர். நத்தம், சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இத்தொழில் அமைந்துள்ளது. இங்கு, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
பாலிஸ்டர், காட்டன், மோனோ காட்டன், பிளாஃபில், ரேமண்ட் காட்டன் ஆகிய ரக துணிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆயத்த ஆடைகள் 150 ரூபாயில் தொடங்கி 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சேலம், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தாக்கம் காரணமாக ஆர்டர்கள் குறைந்தது தொழில் முடங்கியது. இந்தாண்டு ஆரம்பத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு மாதங்கள் உற்பத்தி பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு தளர்வுகள் அறிவித்த நிலையில் வழக்கம் போல் தீபாவளி பண்டிகைக்காக, வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் குவிய தொடங்கியது. அதையடுத்து ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தீபாவளிக்கு சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்ய வேண்டி உள்ளதால் தற்போது ஆடை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் தமிழக, கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக தேனி மாவட்டம் விளங்குகிறது. தேனி மாவட்டத்தில் இரு மாநில எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக கம்பம், போடி அமைந்துள்ளது. குறிப்பாக கம்பம் பகுதியில் அதிகமாக ஆடை உற்பத்தி செய்யும் தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெறுங்குவதையடுத்து இப்பகுதியில் ஆடை உற்பத்தி விரைவாக நடைபெற்று வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்