நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு:


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. கடந்த சனிக்கிழமை இந்திய தேர்தல் ஆணையம், 2024 மக்களவை  தேர்தல் தேதியை அறிவித்தது.  இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ஒரே கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் மார்ச் 20-ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி, 27-ஆம் தேதி மனு தாக்களுக்கு கடைசி நாளாகும். மனுக்கள் பரிசீலனை 28-ஆம் தேதி, வேட்பு மனு வாபஸ் பெறுவது 30-ஆம் தேதி என தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.




தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:


இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பறக்கும் படை வாகனங்களை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் நத்தம் உள்ளிட்ட 6 சட்டபேரவை தொகுதிகளை ஒருங்கிணைத்த மக்களவை தொகுதிக்கு, 24 பறக்கும் படை வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 




தீவிர ரோந்து பணியில் தேர்தல் பறக்கும்படைகள்:


ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3  பறக்கும் படை வாகனங்கள் வீதம் சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறது. அதிநவீன கண்காணிப்பு கேமராவுடன் ஒரு பெண் காவலர், ஒரு ஆண் காவலர், முதல் நிலை அதிகாரி மற்றும் கேமரா  ஒளிப்பதிவு செய்யும் நபர் மற்றும் வாகன ஓட்டுனர் என, ஆய்வு குழுவினர் சோதனை வாகனத்தில் தேர்தல் குறித்த புகார்களை விசாரணை செய்வது, தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் செயல்களை தடுத்து நிறுத்துவது, வாகனங்களை சோதனை செய்வது என வாகனை தணிக்கைகளில் இந்த குழு செயல்பட்டு வருகின்றனர். 


ஒரு சோதனை ஆய்வு  குழுவினருக்கு 8  மணி நேர பணி என்கிற அடிப்படையில், காலை 8 மணி முதல் மதியம், 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சுழற்சி அடிப்படையில் அதிகாரிகள் பணி மேற்கொள்ள உள்ளனர். அந்த அடிப்படையில், சனிக்கிழமை  ஆத்தூர் சட்டமன்ற  தொகுதியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப்பகுதியில் இருந்து இரண்டு சோதனை வாகனங்கள், 




திண்டுக்கல்,  தேனி சாலை பகுதிகளில், பறக்கும் படையைச் சேர்ந்த சவுடமுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் சர்க்கரை முகமது தலைமையான குழுவினர்  சோதனையில் ஈடுபட்டன.அதேபோல், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கொடைரோடு அருகே சுங்கச்சாவடி பகுதிகள் மற்றும் நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் பறக்கும் படை ஆய்வு குழுவினர் சோதனைப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.