திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் அலுவலகத்தில் கடந்த ஆண்டு கொடைக்கானல் உபகோட்ட தபால்துறை ஆய்வாளர் பாண்டியராஜன் ஆய்வு செய்துள்ளார். அதில் செல்வ மகள் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் ரூ.52 லட்சம் வரை கிளை தபால் அதிகாரி கையாடல் செய்திருந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஓராண்டு தலைமறைவாக இருந்த தபால் அதிகாரி முனியாண்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

இன்றைக்கு பலருக்கும் தபால் நிலையங்களில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம், சேமிப்பு கணக்கு, குறுகிய கால வைப்புநிதி கணக்கு உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. கையில் 100 ரூபாய் இருந்தாலே கணக்கை திறந்து, ஓய்வு காலத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காவும் சேமிக்கிறார்கள். சாமானிய மக்கள் அதிகம் பேர் பணம் போட்டுள்ள இடம் தபால் நிலையம் தான்.

Continues below advertisement

ஏனெனில் தபால் நிலையங்களில் சேமிப்பது தான் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று பல்வேறு தர்ப்பினர்கள் நம்பிக்கை வைத்து வருகின்றனர். அதேநேரம் தபால் நிலையங்களிலும் ஒரு சில புல்லுருவிகள் இருக்கிறார்கள். மக்கள் கட்டும் பணத்தை, தபால் நிலைய கணக்கில் கட்டாமல் ஏமாற்றும் வேலைகளை செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் சிக்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் கிளை தபால் அலுவலகம் செயல்படுகிறது. இந்த தபால் அலுவலகத்தில் கடந்த ஆண்டு கொடைக்கானல் உபகோட்ட தபால்துறை ஆய்வாளர் பாண்டியராஜன் ஆய்வு நடத்தினார். அப்போது தபால் அலுவலகத்தில் செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகை விவரங்களை தணிக்கை செய்திருந்தார்.

அதில் செல்வமகள் சேமிப்பு திட்டம், சேமிப்பு கணக்கு, குறுகிய கால வைப்புநிதி கணக்கு உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகை வரவு வைக்கப்படாமல் இருந்துள்ளது. அதுபற்றி விசாரித்த போது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் 87 பேர் செலுத்திய தொகை ரூ.52 லட்சத்து 5 ஆயிரத்து 609 கையாடல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கிளை தபால் அலுவலக அதிகாரி முனியாண்டி (வயது 59) உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் கிளை தபால் அலுவலக அதிகாரி முனியாண்டி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய சென்றனர். ஆனால் ஜி.தும்மலப்பட்டியில் வசித்த தபால் அதிகாரி முனியாண்டி தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமரேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தனிப்படை போலீசாரின் விசாரணையில், பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் முனியாண்டி தங்கி இருந்து மரஅறுவை மில்லில் வேலை செய்வது தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று, அவரை கைது செய்தனர். இதன் மூலம் ஓராண்டாக தலைமறைவாக இருந்த முனியாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.