மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். ஊட்டிக்கு அடுத்தபடியாக கொடைக்கானல் மிகப்பெரிய சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. சமவெளிப் பகுதிகளில் கடும் வெயில் நிலவுவதால், கொடைக்கானல் பகுதியில் நிலவும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கிறார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் கடுமையான கூட்டம் நிலவுகிறது. கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
கொடைக்கானலில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பச்சை போர்வை போர்த்தியது போன்றும், காண்போரின் கண்ணை குளிரவைக்கும் வகையிலும் அமைந்துள்ள எழில் கொஞ்சும் இயற்கை அமைப்பை கொண்டதாகும். இதனால், வெளியூர், வெளிமாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இதமான சீதோசன நிலை காணப்படுகிறது. பகலில் மேகமூட்டமும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த இதமான சூழ்நிலை குளிர்ந்த சீதோஷ்ணத்தையும் ரசித்தபடி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகல் செல்ல தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் தற்போது சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் முகாமிட்டுள்ளன. வனத் துறையினர் யானைகளைக் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதியே சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது