முன்பெல்லாம் வீட்டில் பெண்ணிற்கு விசேஷம் என்றால் அதற்கு பெண்ணின் தாய்மாமன் சார்பில் ஊரே அசரும் படி பல வகை சீர் வரிசைகளை கொண்டு வந்து அக்கா மகளுக்கு சீர் செய்வது வழக்கம். ஆனால் தற்பொழுது வளர்ந்து வரும் நவீன யுகத்தில் வளரும் பிள்ளைகள் சீர் வரிசை பாரம்பரிய முறைகள் எல்லாம் கிட்ட தட்ட மறக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டனர்,




தாய் மாமன் உறவு



தமிழர் வழி உறவில் தாய் மாமன் உறவு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தாய் வழியில்  இருக்கின்ற உறவுகளிலே மிகவும் முக்கிய உறவாக தாய்மாமன் உறவு பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.




தாய் வீட்டு சீர்வரிசை


பெண் பிள்ளையை கட்டிக் கொடுக்கும் வீட்டில்,  நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அதை முன் நின்று, அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் உறவாக தாய்மாமன் உறவு உள்ளது. அந்த வகையில் தாய்மாமன் உறவுக்கு கொடுக்கும் மிக முக்கிய அங்கீகாரமாக தங்கை மகள் பூப்பெய்திய தாய் வீட்டு சீர்வரிசையாக தாய்மாமன் உறவு வழங்குவது. இது காலகாலமாக இருந்து வரும் தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சாரமாகும்.




முதல் திரு விருந்து விழா சீர்வரிசையில் அசத்திய தாய்மாமன்


திண்டுக்கல் அருகே உள்ள ஏ வெள்ளோட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவர் ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தங்கை எஸ்தர் செல்வ பாரதி இவரது கணவர் டோமினிக் இவர்களது குழந்தைகள் ஜெரிக் ஆண்டோ மற்றும் ஞான ஷஸ்மிகா, இவர்களது முதல் திரு விருந்து விழா திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. தனது தங்கையின் குழந்தைகளுக்கு நடைபெறும் முதல் விசேஷம் என்பதால் தாய்மாமன் சீர் பெரிய அளவில் செய்ய வேண்டும் என தாமஸ் முடிவு செய்தார். அதன்படி, ஐந்து பவுன் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள், ஜிலேபி, மைசூர்பாக்கு, பூந்தி, லட்டு, பாதுஷா, அல்வா என 50 வகையான இனிப்பு வகைகள் பலாப்பழம், வாழைப்பழம், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, என 50 வகையான பழம் வகைகள்  மளிகை  சாமான்கள் அரிசி மூட்டைகள், முறுக்கு, மிக்சர், போன்ற கார வகைகள் என்ன 108 சீர்வரிசை தட்டுகளை டாரஸ் லாரி மற்றும் டிராக்டர் வைத்து மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வந்து குழந்தைகளுக்கு  தாய்மாமன் சீர்வரிசை செய்து தனது அன்பை வெளிப்படுத்தி அசத்தினார்.