செம்பட்டி அருகே, தனியார் ஏ.டி.எம்.,மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூபாய் 29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு ஓடிய சம்பவத்தில் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் நாகஅர்ஜுன் (30) இவர், தனியார் ஏ.டி.எம்,மில் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வரும், தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் (51) என்பவரிடம் நாகஅர்ஜுன் உட்பட இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 18 ஏ.டி.எம்.,களில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நாக அர்ஜுன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஏ.டி.எம்.,மில் பணம் வைத்து விட்டு சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம்., மில் பணம் வைப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ரூபாய் 29 லட்சத்துடன் செம்பட்டி அடுத்த, புதுகோடாங்கிபட்டி - அம்பாத்துரை சாலையில் சென்றுள்ளார்.
அப்போது, புதுகோடாங்கிபட்டி அடுத்த டாஸ்மாக் மதுக்கடை அருகே, இவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் இவரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி ரூபாய் 29 லட்சத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏஜென்சி உரிமையாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.கார்த்திகேயன் விசாரணை நடத்தி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ் தீபா, விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இதன்படி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தர் (25) ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20) காமாட்சி மகன் ப்ரீத்திவ் (19) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள செம்பட்டி போலீசார் மேலும், சிலரை தேடி வருகின்றனர். ஏடிஎம்மில் ரூ. 29 லட்சம் வைக்க சென்ற போது கொள்ளை போன சம்பவம் இந்த இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.