திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் கரும்பு விவசாயமும், நூற்றுக்கணக்கான  செங்கல் சூளைகளும்‌ இயங்கிவருகின்றன. இவற்றை நம்பி ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பழனியை அடுத்துள்ள பெரியம்மாபட்டி, பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்த முப்பதுக்கும் மேற்பட்டோரை அப்பகுதி பாஜக நிர்வாகிகள் ராஜிவ்காந்தி மற்றும் மஞ்சப்பன் ஆகிய இருவரும் இணைந்து மீட்டு பழனி தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.




கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள் தெரிவித்ததாவது :-  விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலச்களில் உள்ள கரும்புத் தோட்டங்களில் விளையும் கரும்புகளை வெட்டிக்கொடுக்கும் தொழில் செய்துவருகிறார். கரும்பு வெட்டுவதற்காக‌ சண்முகத்திற்கு  அதிக நபர்கள் தேவைப்படுவதால் தமிழகம் முழுவதும் இருந்து ஆள் பிடிப்பதற்காக சண்முகத்திடம் சங்கர், பிரசாந்த் என்கிற இருவரும் ஆட்களை பணிக்கு அழைத்து வரும் பணியை செய்துவருவதாகவும், இவர்கள் இருவரும் ஆதரவின்றி உள்ள நபர்கள் மற்றும் வறுமையில் தவிக்கும் குடும்பங்களை பார்த்து மாதாமாதம் நல்ல சம்பளம் தருவதாக கூறி ஆசைகாட்டி அழைத்து வந்து சண்முகத்திடம் கொண்டுவந்து விட்டுவிட்டு சென்று விடுவதாகவும்‌ தெரிவித்தனர்.




இவ்வாறு   அழைத்து வரப்படும் நபர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஆண்டுக்கணக்கில் வேலை கொடுத்து, குடும்பத்தினரை காணவிடாமல் கொடுமைப்படுத்துவதாகவும், வேலை செய்யாதவர்களையும், தப்பித்து போக முயல்பவர்களையும் கரும்பால் அடித்து துண்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும், தங்களால் தப்பிக்க முடியாதபடி காவல் இருப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.




இதுகுறித்து மீட்கப்பட்ட செல்வி என்ற பெண் கூறியதாவது:- தனக்கு திருமணமாகி கணவர் உயிரிழந்து விட்டதாகவும், மூன்று பெண்குழந்தைகள் உள்ளதாகவும், தனது குழந்தைகளை தனது அம்மாவிடம் விட்டுவிட்டு ‌வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதாகவும், தற்போது அவர்களின் நிலை என்னவானது என தெரியவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார். தங்களை போல இன்னும் நூற்றுக்கணக்கானோர் இதுபோல் சிக்கியுள்ளதாகவும்‌, அவர்களையும் மீட்டு குடும்பத்தாரிடம் சேர்க்க வேண்டுமென கண்ணீர் மல்க கூறினார். பல ஆண்டுகளாக குடும்பத்தினரை பார்க்க விடாமல் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.