Dindigul : 100 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா! கோலாகலமாக நடந்த இலட்சுமி நரசிங்கப்பெருமாள் கோயில்..

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இன்று வரை 2,639 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் மங்களப்புள்ளி, அருள்மிகு இலட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகு  நேற்று மார்ச் 9ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுரையின்படி, திண்டுக்கல் மாவட்டம், மங்களப்புள்ளி, அருள்மிகு இலட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற  நேற்று 09.03.2025 அன்று திருக்குடமுழுக்கு ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் இறையன்பர்கள் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement


ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்றபின், திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத திருக்கோயில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், மங்களப்புள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு இலட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடத்திட தொல்லியல் துறை ஆலோசகரால் கருத்துரு பெறப்பட்டு ரூ.146.80 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இத்திருக்கோயிலுக்கு பெருமாள் மற்றும் தயார் சன்னதி கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், திரும்ப கட்டுதல் பணிகளும், நுழைவு வாயில் கட்டும் பணிகளும், சுற்றுசுவர் கட்டும் பணியும், கருங்கல் தரைத்தளம் அமைக்கும் பணியும், மடப்பள்ளி கட்டும் பணியும், கழிவறை மற்றும் தண்ணீர் வசதியும், பின்புறம் சுற்றுச்சுவர் கட்டும் பணியும் என மொத்தம் ரூ.146.80 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு  அருள்மிகு இலட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயிலுக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதேபோல் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள இந்திரா நகரில் அமைந்துள்ளது காளியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன் சிலை அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும் இந்த திருக்கோவிலுக்கு 12 வருடங்களுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த ஆறாம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை ஆரம்பமானது. தொடர்ந்து இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் காலம் யாக பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து  நான்காம் கால பூஜை ருத்ராட்சபம் வேதாபரணியம் நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து கோபூஜையும் கன்னிகா பூஜை வடுகபூஜை மற்றும் உயிரோடுகள் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.


சரியாக 10 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 51 அடி உயர ஸ்ரீ  வைஷ்ணவி காளியம்மன் முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் ஓம் சக்தி ஓம் சக்தி என பக்தர்கள் கோஷமுழங்க  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயில் நிர்வாக தின சிறப்பாக இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பழனி மதுரை ஒட்டன்சத்திரம் உடுமலைப்பேட்டை பகுதியிலிருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இன்று வரை 2,639 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. மார்ச் 9.03.2025 அன்று மட்டும் சென்னை, ஆலந்தூர், அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், கல்லூரணி, அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சாத்தனூர், அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், பாபநாசம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், மங்கப்பபுள்ளி, அருள்மிகு லெட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட 23 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement