திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. போட்டியில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், பழனி, நத்தம், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, பழனி, அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 482 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட காளைகளை, திண்டுக்கல் கால்நடைத்துறை உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் 456 காளைகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டன. இதேபோல் மாடுபிடி வீரர்கள் 140 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். வீரர்களில் 5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 135 பேரில் ஒரு சுற்றுக்கு 25 பேர் வீதம் களம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் வெவ்வேறு நிறங்களில் பனியன் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 மணிக்கு, திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வாடிவாசல் வழியாக முதலில் ஊர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து வெளியே வந்தன. மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் காளைகளின் திமிலை பிடிக்க மல்லு கட்டினர். சிலர் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். வீரர்களை மிரட்டும் வகையில் பெரிய கொம்புகளுடன் காளைகள் களம் இறங்கின. அவற்றின் அருகே வீரர்கள் செல்லாமல் பதுங்கினர். சிலர் அந்த காளைகளை அடக்கினர்.
ஆக்ரோஷமாக சென்ற காளைகளை விரட்டி பிடிக்க முயன்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆரவாரம் செய்தனர். சில காளைகள் நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் ஆட்டம் காட்டி அடங்க மறுத்தது. அதையும் மீறி நெருங்கிய வீரர்களை காளைகள் பந்தாடின. வாடிவாசலை விட்டு வேகமாக ஓடிச்சென்ற சில காளைகள், பின்னர் திரும்பி வந்து வீரர்களுடன் மல்லுக்கட்டிய காட்சியும் அரங்கேறியது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், சிறிது நேரம் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த தென்னை நார் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது.
காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் என 21 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த ராஜேஸ் (வயது 21) ஜோசப் (80), ஆரோக்கியசாமி (38) மதனகோபால் (36), கோகுல் (21) லயோலாஅந்தோணி (50) அரவிந்த் (16) ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டி பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், நின்று விளையாடிய காளைகளுக்கும் எல்.இ.டி. டிவி, வெள்ளிகாசு, குக்கர், கிரைண்டர், கட்டில், மின்விசிறி, எவர்சில்வர், பித்தளை பாத்திரங்கள், பீரோ மற்றும் ரூ.10 ஆயிரம், 5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சைக்கிள்கள் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்