திண்டுக்கல் திருநகரை சேர்ந்தவர் மணிமாறன். இவர் அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா. இவர்களின் மகன் அரவிந்த். இவர் திண்டுக்கல் கருவூல காலனியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28.12.2021 அன்று மணிமாறன், பிரேமலதா ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு மகன் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இரவு அங்கேயே தங்கினர். இதற்கிடையே அதிகாலையில் அவருடைய வீடு தீப்பிடித்து எரிவதாக அக்கம்பக்கத்தினர் மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மணிமாறன் அங்கு சென்று பார்த்த போது வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்து இருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகியிருந்தது. இதனால் மனவேதனை அடைந்த மணிமாறன் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், மர்மநபர்கள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க வீட்டுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி வடக்கு காட்டூரை சேர்ந்த நிர்மல்ராஜ் (30) பூட்டை உடைத்து நகைகளை திருடிவிட்டு தீவைத்தது தெரியவந்தது.
EPS: மாநில சுயாட்சி.. திராவிட மாடல் போன்ற உருட்டுகள் எதற்கு? - முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்
மேலும் திருடிய நகைகளை அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபாலிடம் (33) கொடுத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நிர்மல்ராஜ், கோபால் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று மாஜிஸ்திரேட்டு தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட நிர்மல்ராஜிக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 457 (வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 380 (வீட்டுக்குள் புகுந்து திருடுதல்), 436 (வீட்டுக்கு தீ வைத்தல்) ஆகியவற்றின் கீழ் தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், கோபாலுக்கு இ.த.ச. பிரிவு 411-ன் (திருட்டு நகைகளை வாங்குதல்) கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்