தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதத்தில் இருந்தே தொடர்ச்சியாக மழை பொழிவு காணப்படுகிறது.



இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் மாவட்டம் முழுவதும் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதையடுத்து இரவில் பலத்த மழை பெய்தது. இதில் ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன்மூலம் ஒரே நாளில் 321.1 மி.மீ. மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக சத்திரப்பட்டியில் 86.2 மி.மீ., பழனியில் 68 மி.மீ., கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 44.6 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மேலும்  மி.மீ., நிலக்கோட்டையில் 29.2 மி.மீ., கொடைக்கானல் போட்கிளப்பில் 29 மி.மீ., நத்தத்தில் 18 மி.மீ., திண்டுக்கல்லில் 13.2 மி.மீ., வேடசந்தூரில் 0.4 மி.மீ., வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையத்தில் 0.3 மி.மீ. மழை பதிவானது.



 

இதைத் தொடர்ந்து நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 

இதில் வரதமாநதி அணை (66.47அடி),

காமராஜர் அணை (23.5 அடி) ஆகியவை ஏற்கனவே நிரம்பி விட்டன.

மேலும் 65 அடி உயரமுள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் 63.19 அடியும்,

90 அடி உயரமுள்ள பரப்பலாறு அணையில் 77.31 அடியும்,

79.99 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் 77.01 அடியும்,

27.07 அடி உயரமுள்ள குடகனாறு அணையில் 21 அடியும்,

39.37 அடி உயரமுள்ள நங்காஞ்சியாறு அணையில் 28.48 அடியும் தண்ணீர் உள்ளன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, பாச்சலூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் விடிய, விடிய  பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்அரிப்பு மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.  இந்தநிலையில் மங்களம்கொம்பு-கானல்காடு இடையே நேற்று அதிகாலை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண