வேடசந்தூர் அருகே வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற வட மாநில தொழிலாளர்களில் சிக்கிய ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள முத்தானாங்கோட்டை பிரிவு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. ஆட்டோ டிரைவர். இவரது வீடு அதே பகுதியில் தனியாக உள்ளது. இவரது வீட்டில் அருகே தனியார் நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். நேற்று கார்த்தியின் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்ட நிலையில், கார்த்தி மட்டும் இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிற்குள் சத்தம் கேட்டு கார்த்தி கண் விழித்து பார்த்த போது வட மாநில வாலிபர்கள் 3 பேர் வீட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத்தொடர்ந்து கார்த்தி அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் கார்த்தியை தாக்கி விட்டு, சமையலறையில் அரிசி வாளியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூபாய் 50 ஆயிரத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவிலிருந்து வரும் அரியவகை பழங்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தம்
அதில் ஒரு நபரை கார்த்தி சுற்றி வளைத்து பிடித்தார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கார்த்தி அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊர் மக்கள் வடமாநில வாலிபரை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். அதன்பின்னர் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் நூற்பாலை நிர்வாகத்தினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் என்பதும், அவருடன் பணிபுரியும் இரண்டு பேருடன் வந்து கார்த்தியின் வீட்டில் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.
அப்போது அந்த பகுதி பொதுமக்கள் விடுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களால் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே அங்குள்ள தங்கும் விடுதியை நூற்பாலை வளாகத்திற்குள் மாற்ற வேண்டும், அதுவரை அஜய்யை விடுவிக்க மாட்டோம் என்று நூற்பாலை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் விடுதியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அதனைத்தொடர்ந்து போலீசார் அஜய்யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்