திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை அருகே உள்ள இழுப்பப்பட்டு எனும் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் குளித்தலையில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையில் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகன் பிரதீப் (வயது 25). பிலிப்பைன்ஸ் நாட்டில் டாவோ நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் ஏப்ரல் 19ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பிரதீபின் நண்பர் ஒருவர் போன் செய்து பிரதீப் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தந்தை கந்தசாமி இடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கந்தசாமி மற்றும் குடும்பத்தார்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் மாணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதன் பின்பு 5 நாட்களாகியும் மாணவனை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவனின் தந்தை கந்தசாமி கூறுகையில் மருத்துவ படிக்க வேண்டும் என்ற எங்கள் மகனின் ஆசையை நிறைவேற்றவே கனரா வங்கியில் கடன் பெற்று பிலிப்பைன்ஸ் அனுப்பியுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுவேன் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதை எங்களால் ஏற்க முடியவில்லை எங்கள் மகன் தற்கொலை செய்து கொள்ளக் கூடியவன் இல்லை, மேலும் முகத்தில் கருப்புத் துணியை மூடிக்கொண்டு தூக்கில் தொங்கியது போன்ற புகைப்படம் எங்களுக்கு அனுப்பப்பட்டது.
கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் விடுதியில் தங்கி இருந்தவர் திடீரென வெளியே அறை எடுத்து தங்கிய கூறுகிறார்கள். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது எனவே எனது மகனின் உடலை மீட்டு இறப்புக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாவட்ட ஆட்சியர் எங்கள் மகன் உடலை மீட்டுத்தர வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்துள்ளார்.
தற்கொலை தீர்வல்ல..
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.