தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை பெரியகுளம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்னபிரகாஸ் என்பவர் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் துணை ஆட்சியர் ரிஷப் விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் சிலர் அபகரித்ததாக தெரியவந்தது. இந்த நிலத்தின் அரசு மதிப்பு 1 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் என கணக்கிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது.



 

அதுபோல் பெரியகுளம் அருகே உள்ள  தாமரைக்குளத்தில் 60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 60 ஏக்கர் அரசு நிலம், கெங்குவார்பட்டியில் 8 கோடியே 62 லட்சம் மதிப்பில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும் அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்ததும்  விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 3 இடங்களிலும் சேர்த்து பெரியகுளம் சுற்றியுள்ள சுமார் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.



 

இதையடுத்து இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலங்கள் மீட்கப்பட்டு அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. இந்த அரசு நிலங்களை ‘அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து, கணினி பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், தனித்தனியாக 3 புகார்களை பெரியகுளம் துணை ஆட்சியர் ரிஷப் கொடுத்துள்ளார். அந்த புகார்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் விசாரணை நடத்தினர்.



 

விசாரணையை தொடர்ந்து இந்த மோசடி நடந்த கால கட்டத்தில் பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உள்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



 

இதில், ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வருகிறார். ஜெயப்பிரிதா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல் ஆகியோர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். அரசு நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு அரசு தரப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


 

ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண