மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான  மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியபோதை அரபிக் கடலில் தேஜ் புயலும், காற்றழுத்தமும் உருவானது. தேஜ் புயலால் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்தது. குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தற்போது 'மிதிலி' என்ற  புயல் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.  இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  





மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த இரு வாரத்தில் மட்டும் 30 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள் 8 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கும் டெங்கு பாதிப்பு அதிகளவிற்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி 98பேர் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் குறித்து ரத்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆங்காங்கே குவித்துவைக்கப்பட்டுள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும்  நிலை ஏற்பட்டுவருகிறது.



 

மாவட்டம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால்  மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு ஏடிஎஸ் கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரபடுத்த வேண்டும் எனவும், குழந்தைகள், சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல்  பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிகூடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்யவும், டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.