திண்டுக்கல் ஆர்.வி.நகர் பகுதியை சேர்ந்த பெண் பட்டதாரி புவனசுந்தரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலே குஷிதான். புவனசுந்தரி தன்னுடைய குழந்தைகளுக்கு அடிக்கடி சாக்லேட் கொடுத்து வந்த நிலையில் நாமே சாக்லேட்டுகளை செய்து கொடுத்தால் என்ன என்று அவர் மனதில் தோன்றிய எண்ணம் அவரை தொழில் முனைவோர் ஆக்கி உள்ளது. 



தொடக்கத்தில் வீட்டிலேயே சாக்லேட்களை தயாரிக்க தொடங்கிய புவனசுந்தரி; தான் தயாரித்த சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கும் அக்கம்பக்கம் வீட்டாருக்கும் கொடுத்தார். சுவைத்து பார்த்தவர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்கிய நிலையில் சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு சென்று ஹோம் மேட் சாக்லேட்டுகள் தயாரிப்பு குறித்து கற்று கொள்ள தொடங்கினார். அதன் பிட்ன் வீட்டில் இருந்தே சாக்க்லேட்டுகளை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கிய புவனசுந்தரியன் சாக்லேட்டுகளுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் வரவேற்பு கிடைக்க தொடங்கியது. தற்போது அக்கம் பக்கம் மட்டுமில்லாமல், வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலில் இருந்தும் புவனசுந்தரிக்கும் ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன. 




வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசுகள் வடிவில் சாக்லேட்டுகளை தயாரிக்க தொடங்கி உள்ளார் புவனசுந்தரி, பிரபல தீபாவளி பட்டாசு வகைகளான புஸ்வானம், சங்கு சக்கரம், ராக்கெட், துப்பாக்கி, சரவெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு உள்ளிட்ட வடிவங்களில் சாக்லேட்டுகளை தயாரித்து அசத்தும் புவனசுந்தரி, இதனை சாக்லேட் கிஃப்ட் பாக்ஸ்களாக விற்பனை செய்ய தொடங்கி உள்ளார். 



இதுபோன்ற பட்டாசு சாக்லேட்கள் திண்டுக்கல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு குழந்தைகளும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் 500 கிலோ முதல் 700 கிலோ வரையில் தரமான சாக்லேட்டுகளை புவனசுந்தரி தயாரித்து வருகிறார். 



சாக்லேட்டின் வகைகள்:


டார்க், மில்க், ஒயிட் பிளேவர்: ஆரஞ்ச், மேங்கோ, ஸ்டிராபெர்ரி, மின்ட், பிஸ்தா. காபி, சுவீட் அண்ட் ஸ்பிசி, ஐஸ்கிரீம், பட்டர் ஸ்காட்ச், ஹெசல்நட், சுகர் ஃப்ரீ, ஓரியோ பார், டூட்டி ஃப்ரூட்டி, மிக்ஸ்டு நட், பீனட் பட்டர், சாப்டு சென்டர், நியூட்டேல்லா, லேயர்ட், ரியல் ஃப்ரூட் ஸ்பெஷல், மார்பில் எபெக்ட், ப்ரூட் பில்லிங் டிரைட்.




நட்ஸ் வகைகள்:


முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், நிலக்கடலை, தேங்காய் துருவல். மேலும் கார்ன் ப்ளாக்ஸ், பிஸ்கட் கிரன்ச், குல்கந்து, குகீஸ், லிக்யூட் சென்டர் கேரமல், ரியல் ஃப்ரூட் ஜூஸ், க்ரஸ், பெரிரோ ரோச்சேர், ஓரியோ பார், சுகர் ஃப்ரீ, மின்ட், சான்விச் டைப் போன்ற எண்ணற்ற வகைகளில் ஹோம்மேட் சாக்லேட்கள். திண்டுக்கல் மாவட்டத்தின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக சாதாரணமாக வைத்து பயன்படுத்தலாம் எனவும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காரம் நிறைந்த ஹோம் மேட் சாக்லேட்களும் தயார் செய்து வருவதாக கூறுகிறார் புவனசுந்தரி.