கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த கிழமை நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 10 பேரும் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதைப்போல வழக்கில் ஐந்து பேர் விடுதலை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுவாதி இரண்டாம் முறையாக இன்று நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் , ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக ஆஜர் ஆகினார். விசாரணையைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


24 அன்று சுவாதியை மீண்டும் விசாரிக்க எண்ணி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தோம். அதனடிப்படையில் சுவாதி 25ஆம் தேதி நேரில் ஆஜராகினார். அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினோம். சத்தியபிரமாணம் செய்த பின், சுவாதி பதிலளித்தார். அவரிடம் விசாரணை செய்ததில், சுவாதி தொடர்ச்சியாக உண்மையைச் சொல்லவில்லை. மறுத்துவிட்டார். அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சியை காண்பித்தும், அதில் தெரியும் பெண் தான் இல்லை என தெரிவித்துவிட்டார். அந்த காட்சியில் தெரியும் பெண் அவராக இருந்தும், அதனை ஏற்காமல் தொடர்ச்சியாக மறுத்துவிட்டார். அவரையே அடையாளம் தெரியவில்லை என கூறிவிட்டார். சுவாதி வேறு யாராலும் அழுத்தத்திற்கு ஆளாகி, யாரையும் காப்பாற்ற இவ்வாறு கூறுகிறார்களோ? என நினைக்கத் தோன்றுகிறது.


சத்தியபிரமாணம் எடுத்த பின்னர் நீதிமன்றத்தில்  தவறான தகவலை அளித்தால் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் தெளிவாக குறிப்பிட்டே, வழக்கு  இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இன்றும் சத்திய பிரமாணம் எடுத்த பின்னர், 25ஆம் தேதி குறிப்பிட்ட வாக்குமூலத்தில் மாற்றம் ஏதும் உள்ளதா? வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பிய போது, சுவாதி இல்லை என தெரிவித்து விட்டார் .


ஆகவே, " வழக்கு விசாரணை பொருளுள்ளதாக அமைய வேண்டும். அதனடிப்படையில் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடைபெற வேண்டும். அதில் சாட்சிகள் உண்மையைச் சொல்ல வேண்டும். அதற்காகவே சத்தியப்பிரமாணம் பெறப்படுகிறது. 


சில நேரங்களில் உயர்நீதிமன்றங்களில் தவறான தகவலை அளிப்பதை ஏற்க இயலாது. அதுவும் சத்திய பிரமாணம் செய்தபின், தவறான தகவலை அளிப்பவர்கள் எளிதாக கடந்து சென்று விட இயலாது. துரதிஷ்டவசமாக, பல வழக்குகளில் அவ்வாறு நடந்துவிடுகிறது. இந்த வழக்கிலும், நீதித்துறை நடுவர் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்த பின் சுவாதி 20.12.18ல் அளித்த வாக்குமூலத்திற்கு பின் வழக்கு விசாரணை நகராமலேயே இருந்துள்ளது. இது போல பல வழக்குகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை பொறுத்தவரை தவறான தகவலை அளித்ததற்காக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலுமா? என கேள்வி எழுகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்தின் பல உத்தரவுகள் உள்ளன. 


இந்த வழக்கை பொறுத்தவரை, சாட்சி சுவாதி, நீதித்துறை நடுவர் முன்பாக கூறிய வாக்குமூலத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட தகவலைக் கூறுகிறார். அவர் கல்வியறிவு அற்றவர் அல்ல.  அவர் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நன்கு தெரிந்தும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். அவரது சாட்சியம் இந்த வழக்கில் மிக முக்கியமானது. அவரை சந்தித்ததன் காரணமாகவே கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். கீழமை நீதிமன்ற விசாரணையின் போது அதற்கான சாட்சிகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


சுவாதி அழுத்தத்தின் காரணமாக வாக்குமூலம் கொடுத்திருந்தால், அதனை நீதித்துறை நடுவரிடம் தெரிவித்திருக்கலாம். 
தற்போது அதற்கு மாற்றாக தகவலை கூறும் போது அதற்கான காரணத்தையாவது குறிப்பிடலாம். 


இந்த நீதிமன்றமும், சத்தியப்பிரமாணம் எடுத்த பின் அளித்த வாக்குமூலத்திலிருந்து ஏன் மாறுபடுகிறார் என அறிய விரும்பியது. அதற்கான அவகாசத்தையும் வழங்கியது. சுவாதி இந்த வழக்கின் நட்சத்திர சாட்சி. ஆகவே, நாங்கள் சுவாதியின் சாட்சியை முற்றிலுமாக தவிர்க்க விரும்பவில்லை. நீதியை காக்கும் பொருட்டு, இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விசாரித்தோம்.


சிசிடிவி காட்சிகளை ஒளிபரப்பி, அதிலிருப்பவர் யார் என கேட்டதற்கு, தான் இல்லை என தெரிவித்து விட்டார். அந்த காட்சிகளைப் பார்க்கும் போது அது அவர் தான் என தெரியவருகிறது. இருப்பினும் சுவாதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கோகுல்ராஜை அடையாளம் கண்ட சுவாதிக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பது  ஆச்சரியமளிக்கிறது. அவர் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்துள்ளார். அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்ட பின்னரே தவறான தகவலை அளித்துள்ளார். 


நீதித்துறை நடுவர் முன்பு அளித்த தகவல் உண்மையில்லை என்றால் அவர் அவரிடம் தவறான தகவலை அளித்ததாக கருதப்படும். விசாரணை நீதிமன்றத்தில் அவர் சொன்ன தகவல் உண்மையில்லை என்றால் அங்கும் அவர் தவறான தகவல் அளித்ததாகக் கருதப்படும். அவருக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நீதிமன்றம் வாய்ப்பளித்தும், உண்மையை தெரிவிக்கவில்லை. இந்த நீதிமன்றம் கண்டும் காணாமல் இதனை கடந்து செல்ல இயலாது. ஆகவே மேற்கொண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவருகிறது. ஆகவே, சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது.