திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மகன் முகமது இர்பான் (வயது 24). இவருடைய நண்பர்கள் பேகம்பூரை சேர்ந்த முகமது அப்துல்லா (25), முகமது மீரான் (23). திண்டுக்கல் பகுதியில் நேற்று(28.09.2024) இரவு 7 மணிக்கு மேல் சாரல் மழை விட்டு, விட்டு பெய்துகொண்டிருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் முகமது இர்பான் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டரில் திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதிக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். பாலாஜி பவன் எதிரே பென்சனர் காம்பவுண்டு சாலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஸ்கூட்டரை முகமது இர்பான் ஓட்டினார். முகமது அப்துல்லா, முகமது மீரான் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர்.
சரமாரியாக வெட்டி படுகொலை :
அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் முகமது இர்பான் உள்பட 3 பேரையும் பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், ஒருகட்டத்தில் ஸ்கூட்டரை முந்திச்சென்று வழிமறித்து நிறுத்தினர். பின்னர் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓடிவந்து முகமது இர்பானின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதைப்பார்த்த முகமது மீரான் அதிர்ச்சியில் அங்கிருந்து ஓடிவிட்டார். முகமது அப்துல்லா அவர்களை தடுத்தார். அப்போது அவருக்கும் தலையில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து முகமது இர்பானின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த முகமது அப்துல்லா வலியால் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை
இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து முகமது இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் கிடந்த முகமது இர்பான் ஓட்டி வந்த ஸ்கூட்டர், கொலையாளிகள் விட்டுச்சென்ற பட்டா கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு சென்றனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
பட்டறை சரவணன் கொலை வழக்கு :
பின்னர் சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட முகமது இர்பானும், முகமது அப்துல்லாவும் தி.மு.க. பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் 2-வது, 8-வது குற்றவாளிகள் என்பதும், இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. எனவே பழிக்கு பழியாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முகமது அப்துல்லாவும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலையை சிதைத்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.