தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.  குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.





ஜல்லிக்கட்டு போட்டிகள்: 

 

ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 






 


மாடுபிடி வீரர்கள் பயிற்சி:

 

இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகள் ஒருபுறம் தயாராகி வரக்கூடிய நிலையில். ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன . தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் சார்பில் அதன் நிறுவனர் முடக்கத்தான் மணி திருப்பாலை பகுதியில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார் வாடிவாசல் போன்ற அமைப்பில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு மாடுபிடி வீரர்கள் அதனை அடக்கி பயிற்சி எடுத்துக்கொண்டனர்.

 

அரசின் விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியின் போது எவ்வாறு காளைகளை அடக்க வேண்டும் எந்த மாதிரியான காளைகளை எப்படி வாடிவாசல் முன்பாக அடக்க வேண்டும் என்பது குறித்தான இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.



இந்த பயிற்சியில் மதுரை மட்டுமல்லாமல் திருச்சி ,சிவகங்கை, விருதுநகர் , ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாடுபிடி பயிற்சியை எடுத்துக் கொண்டனர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு காளைகளை எவ்வாறு அடக்க வேண்டும்..? உடல் தகுதியை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்..? என்பது குறித்தான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.