தவறான சிகிச்சையால் பார்வையிழந்த சிறுவனுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் அர்ஜுனன். 2002-ல் 2-ம் வகுப்பு படித்தபோது, தளவாய்புரத்தில் மதுரை தனியார் கண் மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாமில் கலந்துகொண்டார். அவருக்குப் பார்வைக்குறைபாடு இருந்ததால், மதுரை மருத்துவமனையில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், பார்வைக் குறைபாடு சரியாகவில்லை. 2009 வரை தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை. அதையடுத்து, சிறுவனின் பெற்றோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிறுவனின் கண்களை பரிசோதித்தபோது, அவர் பார்வை இழந்தது தெரிய வந்தது.


இதையடுத்து, சிறுவனின் தந்தை மூக்கையா விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2010-ல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனுக்கு இழப்பீடாக மதுரையைச் சேர்ந்த தனியார் கண் மருத்துவமனை 8 லட்சமும், மன உளைச்சலுக்காக 2 லட்சமும், வழக்குச் செலவுக்காக 10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது.


 




மற்றொரு வழக்கு

 

மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பஜாரில் உள்ள கடைகளை பழங்கால பொருட்கள் விற்பனைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

இதுதொடர்பாக மதுரை மாநகர் பாஜ.க. தலைவர் டாக்டர் சரவணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:

 

அதில், ‘மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பஸ் நிலையம், வாகன காப்பகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இந்தநிலையில் ஜான்சிராணி பூங்கா வளாகத்தில் ரூ.2 கோடியே 45 லட்சம் செலவில் புராதன பஜார் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் வெளிநாடு-உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பழங்கால மற்றும் புராதன பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 12 கடைகள் கட்டப்பட்டு உள்ளன. வெறும் 2 கடைகளை மட்டும் புராதன பொருட்கள் விற்பனைக்காக விட்டுவிட்டு மற்ற கடைகளை வணிக நோக்கத்தில் ஏலம் விடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் அந்த கடைகள் கட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே இந்த கடைகளை ஏலம் விடுவதற்கு தடை விதிக்க வேண்டும். உரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வெளி மாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதுவாக சிற்றுண்டி கடைகள், அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நிர்வாக ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.