தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் விசைத்தறித் தொழில் அதிகம் நடைபெறுகிறது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. டி.சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டியில் செயல்படும் ஒவ்வொரு விசைத்தறிகளிலும் ஒருநாளைக்கு 4 சேலைகள் வீதம் ஆயிரக்கணக்கான காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.



இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 100 சதவீத காட்டனில் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 




தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான சேலைகள் உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளது. இதன் காரணமாக டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி விசைத்தறி கூடங்களில் இரவு பகலாக சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்காக பெண்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு புதிய டிசைன்களில் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.



அதன்படி கும்கி, கட்டம்புட்டா, கபாலிகட்டம், காஞ்சனாபுட்டா, காத்தாடிபுட்டா, மெர்சரைஸ், பேன்சிகட்டம்,  ஜரிகை காட்டன், செட்டிநாடு பிளைன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட டிசைன்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக இளம் வயது பெண்களை கவரும் வகையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய டிசைன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



பொதுவாக சேலையின் முந்தி பகுதியில் மட்டுமே டிசைன்கள் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு முந்தி மட்டுமின்றி முழு சேலைகளும் பல்வேறு டிசைன்கள் போடப்பட்டு நவீன முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக அதிகளவில் ஆர்டர்கள் வந்திருப்பதால், தொடர்ந்து சேலை உற்பத்தி செய்யும் பணியில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மூலப்பொருள்களான நூல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றும், நெசவாளர்களுக்கு போதுமான ஊதியம் கிடைக்கவில்லை என்றும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் நூல்விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் சற்று மேம்படும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் முடங்கி கிடந்த தங்களது வாழ்வாதாரம் இந்த வருடம் வரும் தீபாவளி பண்டிகை , பொங்கல் பண்டிகை போன்ற நாட்களை எதிர்பாத்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


 


https://bit.ly/2TMX27X*


 


'இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!