காந்திஜியின் 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ”மதுரைக்கு வந்த ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மதுரை விமான நிலையம் என 2 பொய்களை கூறிவிட்டு சென்றுள்ளார். மதுரை விமான நிலைய விரிவாக்க பணி நின்று விட்டதாகவும் அதற்கான மத்திய அரசு நிதி ஒதுக்கியதாகவும் கூறுவது கட்டுக்கதை. மதுரை விமான நிலைய குழு தலைவர் என்ற முறையில் உண்மையை கூறுகிறேன்.



 

2019 ஆம் ஆண்டு வரை மதுரை விமான நிலைய ஓடுதளம் அண்டர் பாஸ் முறை இல்லாமல் செயல்படுத்த திட்டமிட்டிருந்தனர். 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு வாரணாசி, மைசூர், மதுரை என மூன்று விமான நிலையங்களிலும் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அண்டர் பாஸ் முறையில் செயல்படுத்த இருப்பதினால் நிலம் அதிகம் தேவையில்லை என தமிழக அரசிற்கு 2020-ல் கூறினர்.

 

2022-ல் இதற்கான பட்ஜெட் அதிகரிப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணி செய்ய வேண்டும் என்றும் பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது. அதன் விளைவாகத்தான் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறாமல் இருந்தது. தங்கள் மேல் இருந்த பழியை மாநில அரசு மீது வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மதுரை விமான நிலையத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. 24 மணி நேரம் சேவை இல்லாததால் சென்னையில் இருந்து மதுரைக்கு 6.30 மணி வரை தான் விமானம் இயக்கப்படுகிறது.  இரவு 9 மணிக்கு எல்லாம் மதுரை விமான நிலையம் பூட்டப்படுகிறது. 



 

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் இதை இவர்கள் கவனத்தில் கொள்ளாமல் இந்த ஆண்டு டிசம்பர் வரை நீடித்தால் ஜனவரி மாதம் அதற்காக போராட்டம் நடத்துவோம்.



 

மின் கட்டணம் உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?

 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மக்களை பாதிக்கின்ற முடிவுகள் எங்கெல்லாம் எடுக்கப்படுகிறதோ அதை எதிர்ப்பதும்? அதற்காக எதிர்த்து குரல் கொடுப்பதும் காங்கிரஸ் கட்சி தான். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு வந்தபோது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தான் முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தவர். மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு முடிவுகள், யாருடைய ஆட்சியிலும் வந்தாலும் அதை தொடர்ந்து எதிர்ப்பது காங்கிரஸ் கட்சி தான்.



 

ராகுல் காந்தி நடைபயணம் ஜீரோவாக தான் இருக்கும் என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு.?

 

அண்ணாமலை பேசுவது எல்லாம் முன்னுக்கு பின் முரணான பேச்சு. அவர் கொடுத்த தவறான தகவலால் இன்றைக்கு ஜே.பி.நட்டாவின் மானம் போனது. அண்ணாமலையை பொறுத்தவரை தமிழக அரசியலில் தன்னைத்தானே ஒரு மிகப்பெரிய புரட்சியாளர் போல் காட்டிக் கொள்கிறார் அரசியல் பார்வையில் அவர் நகைச்சுவை நடிகராக தான் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்.  மக்கள் பார்வையில் இருந்து உண்மையான மக்கள் பிரச்சினையே பேசுகிற ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு தருகின்றனர். அவர் நடை பயணத்திலேயே அவருக்கு எவ்வளவு ஆதரவு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்ணாமலை பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.