மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காலை, மாலை என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.





இந்தக் கல்லூரியின் பொருளாதார துறையின் ஹெச்.ஓ.டி.,யான  ரெஜினா தேவி என்ற பேராசிரியை கல்லூரியில் மாணவர்களை அவதூறாக பேசுவதாகவும், மாணவர்கள் சிலரை செமஸ்டர் தேர்வு எழுத விடாமலும் மிரட்டுவதாகவும் , பேராசிரியை மீதான குற்றச்சாட்டினை பொய் என கூற வேண்டும் என  மாணவர்களை வற்புறுத்தி மிரட்டி கடிதம் எழுதி வாங்குவதாகவும் முதல்வர் ஜார்ஜ் மற்றும் பேராசிரியர் அரிமோகன் ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,



 

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்ப முயல்வதாகவும் எனவே தங்களை காப்பாற்றுமாறும் கூறி கல்லூரி மாணவர் ஒருவர் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது போன்ற ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



சில நாட்களுக்கு முன்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி துறைத்தலைவர் ரெஜினா தேவி மீது குற்றச்சாட்டு வைத்து மாணாக்கர்கள் சிலர் எழுதிய புகார் கடிதமும் வெளியாகியாகியது. இந்நிலையில் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் இன்று பல்கலைக்கழக கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து மாணாக்கர்களின் புகார் குறித்து விசாரணை நடத்த விரைவில் விசாரணை குழு அமைக்கப்பட்டு குழுவின் அறிக்கையில் உயர்கல்வித்துறைக்கு அனுப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



பொருளாதாரத்துறை ஹெச்.ஓ.டி., ரெஜினாதேவி , தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிய பாகுபாட்டுடன் நடத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து துணைவேந்தர் குமார் விசாரணை நடத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் "மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும், அந்த புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என துணைவேந்தர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.