உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்திக்கு  பணிநிறைவு  பாராட்டுவிழா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது.

 

நீதிபதி ஆனந்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்தி, அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டுவிழா , உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  முனீஸ்வர்நாத் பண்டாரி இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.  நிர்வாக நீதிபதி  P.N. பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

 

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை  நீதிபதிகள் S.S.சுந்தர் ,  வேல்முருகன், ரமேஷ், சேசஷாயி, சுவாமிநாதன்,  புகழேந்தி,  நிர்மல்குமார், தாரணி, விஜயகுமார், ஸ்ரீமதி, சிவஞானம் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து நீதிபதிகள், வீடியோ கான்பரன்சிங் வழியாக பங்கேற்றனர். மேலும் அரசு வழக்கறிஞர்கள்,  வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழக அரசின்  கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் வரவேற்று பேசியபோது, "நீதிபதி ஆனந்தி, ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்து உள்ளார். குறுகிய காலத்தில் பல்வேறு வழக்குகளைக் கையாண்டு,  அதிகமான வழக்குகளை விசாரித்து உள்ளார்.  உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" என பேசினார்.

 

ஏற்புரை வழங்கிய நீதிபதி ஆனந்தி,  "எனது தந்தை V.சுப்பிரமணியம் அவர்களின் ஊக்கத்தால் தான் நீதிபதியானேன். 1991 ஜூலை 1அன்று வழக்கறிஞர் பணியை தொடங்கி,  கடந்த  31 ஆண்டுகள் நீதித்துறையில் பணி புரிந்து உள்ளேன். எனது வழக்கறிஞர் பணியை, மதுரையில் இருந்து தான் தொடங்கினேன். பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணி புரிந்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து மதுரை கிளையிலேயே பணியை நிறைவு செய்கிறேன் என்பது பெருமையாக உள்ளது. எனது குடும்பத்தினர்,  ஆதரவு இல்லாமல் நான் சாதித்து இருக்க முடியாது.  வழக்கறிஞர்கள் உதவியுடன் தான், நீதிபதி பணியை  சிறப்பாக நிறைவேற்ற முடிந்தது. அனைவருக்கும் நன்றி" என கூறினார்.

 

 



 


மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் பராமரிப்புக்காகவும் ஊழியர்களின் ஊதியத்திற்காகவும் கூடுதலான நிதியை ஒதுக்க கோரிய வழக்கில்,  மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.


மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் இளைய சகோதரர் வடிவேலு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "நான் காந்தியக் கொள்கையைப் பின்பற்றுபவர் மற்றும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளேன். மதுரை காந்தி மியூசியத்தில் சுமார் 20 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காந்திஜியின் சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் பரப்புவதும் காந்தி அருங்காட்சியகத்தைப் பராமரிப்பதும்தான் இவர்களின் முக்கிய நோக்கமாகும். 


இவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காந்திய சித்தாந்தத்தின் பாதுகாவலர்களாக கருதப்பட்டாலும், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க பலமுறை முறையிட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் பராமரிப்புக்காகவும் ஊழியர்களின் ஊதியத்திற்காகவும் கூடுதலான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண