நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித்தொழிலாளியான இவரது மகள் சுபாஷினி(வயது 19). இவர், நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று முன்தினம் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.




கல்லூரியின் பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை வகுப்பறையின் வெளியில் நிற்க வைத்ததால் அவமானம் அடைந்து சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர், நாகூர் போலீசில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் சந்தேக மரணம், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு பொறுப்பாளர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த நிலையில் மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை-வேளாங்கண்ணி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.




இதற்குள் சாலை மறியலில் ஈடுபட்ட சிலர் கல்லூரி வளாகத்தில் புகுந்து அங்கு நின்ற பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மாணவியின் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது நண்பரை பார்த்து விட்டு வெளியில் வந்தார். அப்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பேராசிரியர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் மயங்கி விழுந்த அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சாலையின் நடுவே பந்தல் அமைத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




தற்கொலை தீர்வல்ல..
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண