போடி-மதுரை இடையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ் ரயில்பாதையாக இருந்த இந்த ரயில்பாதையை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை திட்ட பணிகள் தொடங்கின. சில ஆண்டுகள் பணிகள் முடங்கி கிடந்தன. பின்னர் மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடந்தன.
இந்த ரயில் பாதையில் ஆண்டிப்பட்டி வரை பணிகள் முடிவடைந்ததால் கடந்த ஆண்டு ஆண்டிப்பட்டி வரை ரெயில் விரைவு சோதனை ஓட்டம் நடந்தது. பின்னர் தேனி வரை பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து ஆண்டிப்பட்டி-தேனி இடையே 3 முறை ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயில்பாதையில் பயணிகள் ரயில் இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழ் அவசியம். எனவே மும்பை மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா இந்த ரயில்பாதையில் மோட்டார் டிராலி மூலம் ஆய்வு செய்தார். மேலும் ரயில் விரைவு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
இதற்காக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ஆண்டிப்பட்டியில் இருந்து டிராலிகள் மூலமாக காலை 9.30 மணிக்கு ஆய்வை தொடங்கினர். அவர்கள் பிற்பகல் 3 மணிக்கு தேனி ரயில் நிலையத்துக்கு வந்தனர். வரும் வழியில் குன்னூர் வைகை ஆற்றுப்பாலம் உள்ளிட்ட 3 பெரிய பாலங்கள், சுரங்கப்பாதைகள், வருசநாடு-க.விலக்கு சாலையில் உள்ள ரெயில்வே கேட், மின்சார வழித்தட குறுக்கீடு, வளைவுகள், ரெயில்பாதை இணைப்புகள் ஆகியவற்றை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.
ஆய்வை தொடர்ந்து மாலையில் ரெயில் விரைவு சோதனை ஓட்டம் நடந்தது. சோதனை ஓட்டத்துக்காக மதுரையில் இருந்து 3 பெட்டிகளுடன் கூடிய ரெயில் காலை 10.30 மணியளவில் தேனி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்கள் பலரும் ரயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் ரயில் என்ஜின் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையை தொடர்ந்து மாலை 4.48 மணிக்கு தேனி ரெயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்காக ரெயில் புறப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அந்த ரெயிலில் பயணம் செய்தனர். 120 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. தேனி-ஆண்டிப்பட்டி இடையிலான 17 கி.மீ. தூரத்தை 12 நிமிடங்களில் கடந்து மாலை 5 மணிக்கு இந்த ரெயில் ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்தை அடைந்தது.
இதன் மூலம் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. பின்னர் அந்த ரெயில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதால் விரைவில் தேனியில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரெயில் இயக்க வாய்ப்புள்ளது. இந்த ஆய்வில், ரெயில்வே கட்டுமான பிரிவு செயல்அதிகாரி பிரபுல்லா வர்மா, தலைமைப்பொறியாளர் இளம்பூரணன், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்